Home நாடு ஒபாமா ஏற்பாட்டிலான சுகாதார மாநாட்டில் அமைச்சர் சுப்ரமணியம்

ஒபாமா ஏற்பாட்டிலான சுகாதார மாநாட்டில் அமைச்சர் சுப்ரமணியம்

519
0
SHARE
Ad

Dr Subramaniam Ministerகோலாலம்பூர், செப்டம்பர், 28 – எபோலா கிருமித் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு மருத்துவர்கள் நிபுணர்கள் கொண்ட குழுவை அனுப்புவது குறித்து
மலேசியா ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தெரிவித்தார்.

இதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் தேவை என்று குறிப்பிட்ட அவர்,  பாதிக்கப்பட்டுள்ள ஐந்து நாடுகளுக்கு 20.6 மில்லியன் ரப்பர் கையுறைகளை மலேசியா  நிச்சயமாக வழங்கும் என்றார்.

“பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அந்தக் கையுறைகளை அனுப்பும் நடவடிக்கை தற்போது நடந்து வருகிறது,” என்று வாஷிங்டன்னில் இருந்து பெர்னாமாவுக்கு தொலைபேசி வழி அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

தற்போது அனைத்துலக சுகாதார பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த மாநாட்டை அமெரிக்க அதிபர் பாரக் ஓபாமா நேற்று தொடக்கி வைத்தார்.

ஒபாமாவின் நேரடி சிறப்பு ஏற்பாட்டில் நடைபெறும் இந்த சுகாதார மாநாட்டில், மருத்துவராக இருக்கும் சுகாதார அமைச்சர் என்ற முறையில் டாக்டர் சுப்ரமணியத்திற்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எபோலா பாதிப்புள்ள லைபீரியா, சியாரா லியோன், கினியா, நைஜீரியா, காங்கோ
ஆகிய 5 நாடுகளுக்கும் மொத்தம் 11 கொள்கலன்களில் (கொண்டெய்னர்)  ரப்பர் கையுறைகள்
அனுப்பப்படுவதாகவும், ஒவ்வொரு கொள்கலனிலும்  1.9 மில்லியன் கையுறைகள்
இருக்கும் என்றும் தெரிவித்தார் சுப்ரமணியம்.

இதற்கிடையே 44 நாடுகளில் இருந்து பேராளர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில்
உரையாற்றிய அவர், எபோலா பாதிப்புள்ள நாடுகளுக்கு வேறெந்த வகைகளில்
உதவிக்கரம் நீட்ட முடியும் என்பது குறித்து மலேசியா தீவிரமாக ஆராய்ந்து
வருவதாகத் தெரிவித்தார்.

“இந்தக் கொடிய பாதிப்பை முடிவுக்கு கொண்டு வர அனைவரும் இணைந்து
செயல்படுவோம். இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொண்டு சமாளிக்க, நம்மை
தயார்படுத்திக் கொள்ள இதுபோன்ற மாநாடுகள் அவசியம்” என்றும் அவர் மாநாட்டில் தெரிவித்தார்.

“மலேசியாவில் அவசரகால செயல்பாட்டு மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளோம். இது தொடர்பான நிபுணத்துவத்தை வட்டார நாடுகளுடனும்,
அனைத்துலக அளவிலும் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளோம்,” என சுப்ரமணியம் மேலும் குறிப்பிடுள்ளார்.