பாரிஸ், செப்டம்பர் 29 – கடந்த பதினான்கு நாட்களாக நடைபெற்று வந்த ஏர் பிரான்ஸ் விமானிகளின் வேலை நிறுத்தப் போராட்டம், நேற்று முடிவுக்கு வந்தது. திருப்திகரமான உடன்பாடுகள் ஏற்படவில்லை என்றாலும், விமான நிறுவனத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையே சுமூகமான உறவு நிலவுவதால் விமானிகள், போராட்டத்தை கை விடுவதாக அறிவித்தனர்.
குறைந்த கட்டணங்களைக் கொண்ட விமான நிறுவனங்கள் மற்றும் அரபு அரச குடும்பத்தின் ஆதரவு பெற்ற அரபு விமான நிறுவனங்கள் ஆகியவை ஏற்படுத்தும் கடும் வர்த்தகப் போட்டியைத் தொடர்ந்து, ஐரோப்பாவின் பல விமான நிறுவனங்கள் தாங்களும் குறைந்த கட்டணச் சேவையைத் தொடரலாம் என்று தீர்மானித்தன. குறிப்பாக ஐரோப்பாவின், இரண்டாவது பெரிய விமான நிறுவனமான ஏர்பிரான்ஸ் தனது குறைந்த கட்டண நிறுவனமான டிரான்ஸ்வியாவின் சேவைகளை ஐரோப்பாவில் அதிகரிக்க முடிவு செய்தது.
அதிக சம்பளம் பெற்றுவந்த அந்நிறுவன விமானிகளிடையே, விமான நிறுவனத்தின் புதிய திட்டங்கள் குறித்து எழுந்த கருத்து வேற்றுமை காரணமாக விமானிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டு வாரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்தப் போராட்டத்தினால் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறக்கம் செய்யப்பட்டது. நாள் ஒன்றுக்கு 20 மில்லியன் யூரோக்கள் நஷ்டத்தை விமான நிறுவனம் சந்திக்க நேர்ந்தது. விமான நிறுவனத்திற்கும், விமானிகளின் தொழிற்சங்கத்திற்கும் இடையே தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியைத் தழுவிய நிலையில், தன்னிச்சையான இடைத்தரகர் நியமிக்கப்பட்டால் போராட்டத்தை நிறுத்திக் கொள்வதாக விமானிகள் சங்கம் அறிவித்தது. எனினும், இந்த புதிய நடைமுறையை விமான நிறுவனமும், 16 சதவிகித பங்குகளைக் கொண்டிருந்த அரசு தரப்பும் நிராகரித்தன.
எனினும், டிரான்ஸ்வியாவின் சேவையை உள்நாட்டில் மட்டும் தொடர்வது என்றும், ஐரோப்பாவில் இதனை முழுமையாக செயல்படுத்துவதை நிறுத்திவைக்கலாம் என விமான நிறுவனம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, விமானிகள் சங்கம் வேலைநிறுத்தத்தை முடித்துகொள்வதாக அறிவித்தது. இதன்பின்னர் நேற்று பாதிக்கும் குறைவான விமானங்கள் இயக்கப்பட்டன.