புது டெல்லி, செப்டம்பர் 29 – உலக அளவில் சிறப்பாக செயல்படும் ‘மெட்ரோ’ (Metro) இரயில் நிலையங்கள் பற்றிய இணைய கருத்துக் கணிப்பில் இந்தியாவின் தலைநகரமான டெல்லியின் மெட்ரோ இரயில் நிலையம், இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
இவ்வாண்டின் ஏப்ரல்-28 முதல் மே-25 வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் டெல்லி, ஹாங்காங், லண்டன், மேட்ரிட், பாரிஸ், சாண்டியாகோ, சிங்கப்பூர், ப்ருஸெல்ஸ், பாங்காக், இஸ்தான்புல், கோலாலம்பூர், நியூ கேஸ்ட்டில், டோரண்டோ உள்ளிட்ட 18 பெருநகரங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் மெட்ரோ இரயில் சேவைகளின் தரம் தொடர்பாக பயணிகளிடையே வாக்கெடுப்பு இணையத்தின் வழியாக நடத்தப்பட்டது.
இந்த கருத்துக்கணிப்பில், ரயில்களின் சேவை, இட வசதி, பயணிகளை கையாளும் திறன், நம்பத்தன்மை போன்ற பல காரணிகள் குறித்து சுமார் 41 ஆயிரம் மக்கள் தங்களது கருத்துகளை இணையதளத்தில் பதிவு செய்து வாக்களித்தனர்.
இந்த வாக்கெடுப்பின் முடிவில் லண்டன் மெட்ரோ இரயிலுக்கு, அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை டெல்லி மெட்ரோ இரயில் நிலையம் பிடித்துள்ளது.