தோக்கியோ, செப்டம்பர் 30 – கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நிகழ்ந்த ஓன்டேக் எரிமலையின் சீற்றம் காரணமாக ஜப்பானில் 36 பேர் வரை பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது. இந்நிலையில் அங்கு மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி இந்த எரிமலை சனிக்கிழமையன்று வெடித்துச் சிதறியுள்ளது.
எரிமலை சீற்றத்தைக் காட்டும் சில புகைப்படங்களை ஜப்பானிய அரசாங்கம் வெளியிட்டது.
28ஆம் தேதி வரை இதுவரை 10 பேர் பலியானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 5 பேர் கடுமையாக காயமடைந்த நிலையில் எரிமலையின் உச்சியில் கண்டெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
குமுறலும் சீற்றமும் காட்டிய ஒன்டேக் எரிமலையின் தோற்றம்…
தலைநகர் தோக்கியோவில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகனோ மற்றும் கிபு பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ளது ஓன்டேக் எரிமலை.
ஜப்பானில் இயங்கி வரும் பல்வேறு மலையேற்றக் குழுக்கள் இந்த எரிமலையின் மீது ஏறி பயிற்சி பெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த சனிக்கிழமையும் 250 பேர் கொண்ட மலையேற்றக் குழு பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
அச்சமயம் ஒன்டேக் எரிமலை திடீரென வெடித்துச் சிதறி அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. எரிமலையின் சீற்றம் எடுத்த எடுப்பிலேயே மிக உக்கிரமாக இருந்தது.
ஹெலிகாப்டர் மூலம் எரிமலையில் தரையிறங்கிய ஜப்பானின் மீட்புப் பணிக் குழுவினரின் அதிரடி மீட்பு நடவடிக்கைகள்…
வெடித்துச் சிதறிய சில நிமிடங்களிலேயே தீப்பிழம்புகளையும் சாம்பலையும் கக்கத் தொடங்கியது. அவை எரிமலையின் தென்பகுதியில் மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை பரவின.
எரிமலையின் மேற்பரப்பில் இருந்து வெளியான சாம்பல் திட்டுகள் மேகங்களில் கலந்து, அப்பகுதி முழுவதையும் இருளில் ஆழ்த்தியது. இதனால் அந்த மலையின் சரிவுப்பகுதியில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. அவர்களில் சிலர் தங்களது சொந்த முயற்சியில் மலையை விட்டு மெல்ல இறங்கி, தரைப் பகுதியை வந்தடைந்தனர்.
சுமார் 10 ஆயிரத்து 62 அடி உயரமுள்ள இந்த எரிமலையின் மீது ஏறுவதற்கு குழந்தைகளும் அன்றைய தினம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
புகையும் சாம்பலும் கக்குகின்ற – குமுறும் ஒன்டேக் எரிமலையின் தோற்றம்…
மலையேற்ற வீரர்களை மீட்கும் பணி உடனடியாகத் தொடங்கியது. எரிமலையில் இருந்து வெளியான வெப்பம் கலந்த சாம்பல் தாக்கி மூச்சுத்திணறி மயக்கமடைந்த பலர் மீட்கப்பட்டனர்.
இவர்களில் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மேலும் 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து பலி எண்ணிக்கை 36 ஆக உயரக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாம்பலுக்குள் புதைந்து காணாமல் போன மேலும் பலரை மீட்கும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் எரிமலைப் பகுதியில் நச்சு வாயுக்களும் வெளிப்படலாம் என்பதால் திங்கட்கிழமை மீட்புப் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
எரிமலையின் குமுறலுக்குப் பின்னர் எரிமலையைச் சுற்றியுள்ள காடுகளில் படிந்துள்ள சாம்பல்….
படங்கள்: EPA