பெங்களூரு, செப்டம்பர் 29 – சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டிருக்கும் தகவல் வெளியானது முதல் விதம் விதமான, புதிய, புதிய உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அவர் அதே சிறை வளாகத்தில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளரின் விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பிரபல இந்திய பத்திரிகையான இந்தியா டுடே பரபரப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அக்குறிப்பிட்ட விருந்தினர் மாளிகையில் குளிர்சாதன வசதி கொண்ட அறைகள், தொலைக்காட்சி, தொலைபேசி உள்ளிட்ட வசதிகள் இருப்பதாகவும், அப்படிப்பட்ட ஒரு அறையில்தான் ஜெயலலிதா தங்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது.
அந்த மாளிகையில் ஜெயலலிதா ஓர் அறையில் இருக்க, மற்றொரு அறையில் சசிகலாவும், இளவரசியும் இருப்பதாக இந்தியா டுடே கூறியுள்ளது.
ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரனும் இதே மாளிகையில்தான் உள்ளார் என்றும், சுரங்க ஊழல் வழக்கில் கைதான முன்னாள் கர்நாடக அமைச்சர் ஜனார்தனன் ரெட்டியுடன் அவர் ஓர் அறையைப் பகிர்ந்து கொண்டுள்ளார் என்றும் அப்பத்திரிகைச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா என்ன உணவு உண்டார்?
ஜெயலலிதா என்ன உணவு உண்டார் என்பது குறித்தும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
சிறை உணவு வழங்கப்பட்டதாக முந்தைய தகவல்கள் வெளிவந்த நிலையில், அந்த உணவை ஜெயலலிதா உட்கொள்ளவில்லை என்றும், முதல்வராகப் பதவியேற்றுள்ள ஓ.பன்னீர் செல்வம் வாங்கி வந்த ஆனந்த பவன் உணவகத்தின் இட்டிலிகளை சாப்பிட்டார் என்றும் பத்திரிக்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்றொரு செய்தி அவர் அதிகாலை 3.30 மணிக்கே எழுந்துவிட்டார் என்றும் நடைப் பயிற்சி செய்தார் என்றும் தெரிவிக்கின்றது.
இதற்கிடையில், அவரது வழக்கின் மேல்முறையீடு, பிணையில் விடுதலை (ஜாமீன்) போன்ற விவகாரங்கள் தொடர்பில் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அவரைப் பிரதிநிதிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.