கோலாலம்பூர், செப்டம்பர் 30 – கோலாலம்பூரில் இருந்து ஏர்-ஆசியா, இந்தியாவின் முக்கிய நகரமான ஹைதராபாத்திற்கு விமான சேவையை வரும் டிசம்பர் மாதம் 8-ம் தேதி முதல் மீண்டும் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
மலிவு விலை விமான சேவை நிறுவனமான ஏர்-ஆசியா, வர்த்தக நோக்கத்திற்காக அடிக்கடி கோலாலம்பூரிலிருந்து ஹைதராபாத்திற்கு பயணிப்பவர்கள் பயன் பெறவேண்டும் என இந்த வழித்தடத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.
இதே போல் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் டில்லி மற்றும் மும்பை நகரங்களுக்கான சேவையை மீண்டும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நகரங்களை இணைப்பதன் மூலம் மலேசியாவிற்கு நேரடியாக வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கையும் உயரும் என்று கூறப்படுகின்றது.
இது பற்றி ஏர்-ஆசியா நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவின் தலைவர் ஸ்பென்சர் லீ கூறுகையில், “கோலாலம்பூர்-ஹைதராபாத்தை இணைக்கும் இந்த வழித் தடத்தை மீண்டும் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி தரும் செய்தியாகும். இதன் மூலம் குறைந்த கட்டணத்தில் மலேசியாவிற்கு பயணிகள் வருகை புரிய வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறி உள்ளது” என்று கூறியுள்ளார்.
டிசம்பர் மாதம் 8-ம் தேதி முதல் 2015-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி வரை உள்ள கால இடைவெளிகளில், பயணிகள் பயணம் மேற்கொள்வதற்கான கட்டண முன்பதிவு, இன்று முதல் வரும் அக்டோபர் 5-ம் தேதி வரை தொடங்குகின்றது. இதற்கான ஒரு வழிக் கட்டணமாக 129 ரிங்கிட்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.