கோலாலம்பூர், அக்டோபர் 3 – கடந்த 6 மாத காலமாக சிறைவாசம் அனுபவித்து வந்த இண்ட்ராப் இயக்கத்தின் போராட்டவாதியும் வழக்கறிஞருமான பி.உதயகுமார், இன்று காஜாங் சிறைச்சாலையில் இருந்து விடுதலை ஆவார் என இண்ட்ராப் இயக்கம் அறிவித்துள்ளது.
தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் தற்போது வரிசையாக ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வரும் வேளையில் சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்கைச் சந்தித்தவர் உதயகுமார்.
பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதம் தொடர்பாக அவருக்கு எதிராக அரசாங்கம் தொடர்ந்த வழக்கில் அவருக்கு 1 வருட காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் மேல் முறையீட்டைத் தொடர்ந்து இந்த தண்டனைக் காலம் 6 மாதமாக குறைக்கப்பட்டது.
உதயகுமார் மீது விதிக்கப்பட்ட தண்டனை அதிகம் என்றும், அவர் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் மற்றொரு இண்ட்ராப் தலைவரும், உதயகுமாரின் சகோதரருமான வேதமூர்த்தி கருத்து தெரிவித்திருந்தார்.
இன்று, விடுதலை செய்யப்பட்டவுடன், காஜாங், ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.