கோலாலம்பூர், அக்டோபர் 13 – மக்கள் நலனை முன்னிறுத்தி, தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய சிறந்த பட்ஜெட்டை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அளித்திருப்பதாக பிரதமர் துறை முன்னாள் துணையமைச்சர் டத்தோ முருகையா பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த மேலும் 5 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை வரவேற்பதாக, தமிழ்ப் பள்ளிகள் மேம்பாட்டு அறவாரியத் தலைவருமான அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“கற்றல் கற்பித்தல் திட்டங்களைச் செயல்படுத்த கல்வி அமைச்சுக்கு 560 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளார் பிரதமர். இதில் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக தலா 5 கோடி வெள்ளியை ஒதுக்கி உள்ளார். மாணவர்களுக்கான நூறு வெள்ளி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அவர் நீட்டித்திருப்பதும் வரவேற்கத்தக்க அம்சங்கள்.
“ஒரே மலேசிய உதவித் தொகையை உயர்த்தியது, டிங்கி நோயை ஒழிக்க 3 கோடி வெள்ளி ஒதுக்கீடு, பல அத்தியாவசிய பொருட்களுக்கான ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்தது ஆகியன மக்களின் சுமையை குறைத்து, மனங்களை குளிரச் செய்திருக்கிறது,” என்று டத்தோ முருகையா தெரிவித்துள்ளார்.
4 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு தொலைநோக்குடன் கூடிய அவரது பொருளாதாரப் பார்வையைப்
புலப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள டத்தோ முருகையா, இந்திய பெண் தொழில் முனைவர்களுக்காக 3 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்திருப்பதன் வழி அனைத்து சமுதாயத்தினர் மீதும் பிரதமர் கொண்டுள்ள அக்கறை வெளிப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
“மக்களின் வாங்கும் சக்திக்கேற்ப 80 ஆயிரம் நியாய விலை வீடுகள் கட்டப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு பலரது வீடு வாங்கும் கனவை
நிறைவேற்றும் என்பது உறுதி. மேலும் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்பும் இந்த பட்ஜெட் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
“மொத்தத்தில் பிரதமர் அளித்துள்ள பட்ஜெட் இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்தையும் குறிவைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் வழி நாட்டின் முன்னேற்றத்தையும் பிரதமர் உறுதி செய்துள்ளார். இந்த மக்கள் நலன் சார்ந்த வரவு, செலவு அறிக்கையானது அனைத்து தரப்பினருக்கும் நம்பிக்கையை, திருப்தியை தந்திருக்கும் என்பது உறுதி,” என டத்தோ முருகையா மேலும் தெரிவித்துள்ளார்.