Home நாடு எபோலா மலேசியாவைத் தாக்கினால் சோதிக்க 21 மருத்துவமனைகள்!

எபோலா மலேசியாவைத் தாக்கினால் சோதிக்க 21 மருத்துவமனைகள்!

443
0
SHARE
Ad

Hilmi Yahya Health Deputy Ministerகோலாலம்பூர், அக்டோபர் 15 – எபோலா நோய் தொற்றை சோதிக்க நாடு முழுவதும் 21 மருத்துவமனைகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதாரத் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஹில்மி யாகாயா தெரிவித்தார்.

இது எபோலா தொற்று பரவுவதைத் தடுக்கும் விதமாக தேசிய பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் நடவடிக்கை மையம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்று என்றார் அவர்.

“இந்த 21 மருத்துவமனைகளும் எபோலா தொற்று இருப்பதை தொடக்க நிலையிலேயே கண்டறியும். இதன் பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக 3 சிறப்பு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். தீபகற்ப மலேசியாவில் உள்ள சுங்கை பூலோ மருத்துவமனை, சபாவில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனை மற்றும் சரவாக்கில் உள்ள கூச்சிங் பொது மருத்துவமனை ஆகியவையே அவை,” என்றார் டாக்டர் ஹில்மி யாகாயா.

#TamilSchoolmychoice

கே.எல்.ஐ.ஏ மற்றும் கே.எல்.ஐ.ஏ. 2, பினாங்கு, ஜொகூர், கூச்சிங், கோத்தகினபாலு விமான நிலையங்களில் எபோலா தொற்று இருப்பதாக சந்தேகிப்பவர்களை அடையாளம் காண சுகாதார அதிகாரிகள் பணியில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், சிங்கப்பூர், தாய்லாந்து எல்லைகளில் உள்ள மலேசியாவுக்கான நுழைவாயில்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவதாகக் கூறினார்.

எபோலா தொற்றை உறுதி செய்வதற்கான 3 பரிசோதனைக் கூடங்களும் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எபோலாவால் பாதிக்கப்பட்டுள்ள கினியா, லைபீரியா, நைஜீரியா மற்றும் சியாரா லியோனைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் மேற்கு ஆப்பிரிக்க மாணவர்களைக் கண்காணிக்க கல்வி அமைச்சின் ஒத்துழைப்பை கோரியிருப்பதாகக் குறிப்பிட்ட டாக்டர் ஹில்மி யாகாயா, ஹஜ் யாத்திரை முடிந்து நாடு திரும்புகிறவர்களுக்கும் எபோலா பாதிப்பு குறித்து விவரிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.