நியூயார்க், அக்டோபர் 15 – ரோபோக்கள் எனப்படும் இயந்திர மனிதனுக்கு செயற்கை நுண்ணறிவை வழங்க விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.
அது மனித குலத்துக்கு மிகப்பெரும் ஆபத்தாக முடியும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் கூறியுள்ளார். ரோபோக்களுக்கான ‘செயற்கை நுண்ணறிவு’ (Artificial Intelligence) பற்றிய கேள்விகளுக்கு மஸ்க் பதிலளித்துள்ளதாவது:-
“சமீப காலமாக ரோபோக்களுக்கு செயற்கை நுண்ணறிவை வழங்க விஞ்ஞானிகள் கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதனால் ஏற்பட இருக்கும் பின்விளைவுகள் பற்றி அவர்கள் கவலை கொள்வதில்லை.”
“தொடர்ச்சியான முயற்சிகளினால் ரோபோக்களுக்கு செயற்கை நுண்ணறிவை வழங்கும் முறை சாத்தியமாகும். அந்த நாள் மனித குலத்தின் அழிவிற்கு ஆரம்பமாக இருக்கும்.
ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவின் மூலம் எளிதாக சுய முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொள்ளும்.” “அதன் விளைவுகள் அணு ஆயுதத்தை விட கொடுமையானதாக இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.