பாக்தாத், அக்டோபர் 20 – இஸ்ரேல் பிரதமர் மினாசெம் பெகினை, ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் கடத்த திட்டமிட்ட தகவல், தற்போது வெளியாகி உள்ளது.
ஈராக்கில் கட்டப்பட்ட அணு உலைகளின் மீது கடந்த 1981-ம் ஆண்டு இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதன் பின்னணியில் இருந்த இஸ்ரேல் பிரதமர் மினாசெம் பெகினை ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் கடத்த திட்டமிட்டதாகத் அவரது வழக்கறிஞர் பாடி அரேப் தெரிவித்துள்ளார்.
சதாம் உசேன் கடந்த 1981-ம் ஆண்டு ஈராக்கின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, பாலஸ்தீனத்துக்கு ஆதரவான செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தது.
எனினும், சதாம் உசேன் தனது முடிவுகளில் இருந்து பின் வாங்க வில்லை. அதனால், 1981ம் ஆண்டு ஜூன் மாதம் ஈராக்கில் கட்டப்பட்டு வந்த அணு உலைகளின் மீது இஸ்ரேல் இராணுவம், விமானத் தாக்குதல் நடத்தியது.
இத்தாக்குதலை கண்டித்து இஸ்ரேல் பிரதமர் மினாசெம் பெகினை கடத்தி, ஈராக் தலைநகர் பாக்தாத் நகருக்கு கொண்டு வருவது குறித்து சதாம் உசேன் இராணுவ அதிகாரிகளுடன் திட்டமிட்டதாகக் கூறப்படுகின்றது.
எனினும், மேற்கத்திய நாட்டின் தலைவர் ஒருவரின் வற்புறுத்தல் காரணமாக இஸ்ரேல் பிரதமரை கடத்தும் திட்டத்தை சதாம் உசேன் கைவிட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ஈராக் சர்வாதிகாரி சதாம் உசேனின் நினைவலைகள் குறித்த புத்தகம் அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில், அவர் குறித்த இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.