ஜெனிவா, அக்டோபர் 21 – மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த சில மாதங்களாக பாதிப்பை ஏற்படுத்திய எபோலா நோய்க் கிருமியின் தாக்கம் , தற்போது அங்கு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
2014-ஆண்டில், உலக அளவில் மனித குல அழிவிற்கு முக்கிய காரணங்களாக இருந்தது தீவிரவாதமும், எபோலா நோயின் தாக்கமும் தான். மேற்கத்திய நாடுகள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் எபோலா நோயின் காரணமாக பெரும் மனித அழிவை சந்தித்து வருகின்றன.
இந்த நூற்றாண்டின் மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய நோய் எபோலா என்று உலக நாடுகள் கூறியுள்ள நிலையில், கடந்த 42 நாட்களாக நைஜீரியாவில் எபோலா நோய் கண்டறியப்படவில்லை. இதன் காரணமாக அங்கு தற்போது எபோலா நோய் இல்லை என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார மையம் கூறுகையில், “மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த சில மாதங்களில் 20 பேர் எபோலா நோயினால் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அவர்களில் 8 பேர் உயிரிழந்ததுள்ள நிலையில், மற்றவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
இந்த நோயை தடுக்க அங்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 42 நாட்களில் புதிதாக எபோலா இருப்பதாக எவரும் கண்டறியப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது.”
“இதனால் எபோலா பாதிப்பு அங்கு குறைந்துள்ளது. தீவிர தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன” என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.