Home உலகம் வெள்ளை மாளிகை சுவரேறிக் குதித்தவனை மோப்ப காவல் நாய்கள் தடுத்து நிறுத்தின

வெள்ளை மாளிகை சுவரேறிக் குதித்தவனை மோப்ப காவல் நாய்கள் தடுத்து நிறுத்தின

818
0
SHARE
Ad

White Houseவாஷிங்டன், அக்டோபர் 23 – அமெரிக்க அதிபரின் வசிப்பிடமான வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி விளக்கிக் கூற வேண்டியதில்லை. அப்படியிருந்தும் இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக, நேற்று புதன்கிழமை மாலை, ஒரு மர்ம மனிதன் வெள்ளை மாளிகையின் சுவரேறிக் குதித்திருக்கின்றான்.

ஆனால், வட பகுதியின் திடல் பகுதியில் ஏறிக் குதித்த அவனைக் கண்டுகொண்ட காவல் துறையின் மோப்ப நாய்கள் அவனை சூழ்ந்து கொண்டு தடுத்து நிறுத்தி, அவனைக் கீழே சாய்த்தன.

அதன் பின்னர் அவனை அதிகாரிகள் சூழ்ந்து கொண்டு கைது செய்தனர்.

#TamilSchoolmychoice

கே-9 (K-9) பிரிவைச் சேர்ந்த அந்த மோப்ப நாய்கள் வெள்ளை மாளிகையை கண்காணித்து வரும் பாதுகாப்புப் படைகளின் ஒரு பிரிவாகும். சுவரேறிக் குதித்த சந்தேகப் பேர்வழியை நாய்கள் சூழ்ந்து கொண்டு தாக்குவதையும், அவன் அந்த நாய்களை குத்துவதையும், உதைப்பதையும் கண்காணிப்பு படம் பிடிக்கும் கருவிகளின் காணொளிகள் (வீடியோ) மூலமாக தெரிய வந்ததாக தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கைது செய்யப்பட்ட பின்னர் அந்த நபர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அந்த நபரின் பெயர் டோமினிக் அடிசன்யா என்றும் அவனது வயது 23 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவன் ஆயுதங்கள் எதுவும் வைத்திருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு மோப்ப காவல் நாய்களுக்கும் ஏற்பட்ட காயங்களுக்காக அவை மிருக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை முழுக்க கடுமையான பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. அருகிலிருந்து சுற்றுப் பயணிகளும் அப்புறப்படுத்தப்பட்டனர்.

நேற்று நடந்த சம்பவத்தோடு சேர்த்து இதுவரை இந்த ஆண்டில் மட்டும் ஏழு முறை வெள்ளை மாளிகையின் சுவரேறிக் குதிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி ஓமார் கொன்சாலஸ் என்ற 42 வயது முன்னாள் இராணுவ வீரன் சுவரேறிக் குதித்து வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டான். அவனிடம் கத்தி போன்ற ஆயுதங்களும் 800 சுற்று துப்பாக்கி ரவைகளும் கண்டெடுக்கப்பட்டது. வெள்ளை மாளிகைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவனது காரில் அரிவாளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சரித்திரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேர்ந்த இந்த பாதுகாப்பு மீறல்கள் காரணமாக நாடாளுமன்ற விசாரணைகள் நடத்தப்பட்டு, புலனாய்வுத் துறையின் இயக்குநர் பதவி விலகினார்.