புத்ராஜெயா, அக்டோபர் 30 – டத்தோஸ்ரீ அன்வாருக்கு எதிரான ஓரினச் சேர்க்கை வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாஃபி அப்துல்லா (படம்) தெரிவித்தார்.
தற்போது சைஃபுலின் மரபணுவின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ள அன்வார் தரப்பு வழக்கறிஞர் ராம்கர்ப்பால் சிங்கின் வாதம் வியாழக்கிழமை வரை நீடிக்கக்கூடும் என்றார் அவர்.
“மரபணு தொடர்பான விஷயங்கள் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவை அல்ல. அது சிக்கலான ஒரு விஷயம். எனினும் மரபணு தொடர்பான பரிசோதனைகளில் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைவிட மலேசியா முன்னணியில் உள்ளது,” என்றார் ஷாஃபி அப்துல்லா.
எனவே இதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது இவ்வழக்கின் தீர்ப்பு வெள்ளிக்கிழமை வெளியாக வாய்ப்புள்ளதாக குறிப்பிட்ட அவர், கடந்த விசாரணையின் போது அன்வார் தரப்பில் எண்ணற்ற மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால், நீதிபதிகளுக்கும் உரிய அவகாசம் தேவைப்படுகிறது என்றார்.
தலைமை நீதிபதி துன் அரிபின் சகாரியா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது.