கோலாலம்பூர், நவம்பர் 1 – அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானத்திற்காக பிரிக்பீல்ட்சில் உள்ள 110 ஆண்டுகள் பழமை வாய்ந்த விவேகானந்தர் ஆசிரமம் இடிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு கட்டுமானம் குறித்த அறிவிப்பில் ஏற்பட்ட தவறுதான், ஆசிரமம் இடிக்கப்பட உள்ளதாக பலரும் கருத காரணமாக அமைந்துவிட்டது என பிரிக்பீல்ட்ஸ் பிகேஆர் மகளிர் பிரிவு தலைவி ஷீனா கே.சுப்ரா தெரிவித்தார்.
“எக்காரணத்தைக் கொண்டும் ஆசிரமத்தின் மீது கை வைக்கப்பட மாட்டாது. இதற்கான உறுதிமொழியை நான் அளிக்கிறேன்,” என்று ஆசிரம நிர்வாகக் குழுவுடனான அவசரக் கூட்டத்திற்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட கெராக்கான் கட்சியின் பி.மணிவண்ணன் உள்ளிட்ட அனைவரிடமும் பாரம்பரியம் வாய்ந்த ஆசிரம கட்டிடத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்பட மாட்டாது, அக்கட்டிடம் புதுப்பிக்கப்பட மாட்டாது என தெளிவாக விவரிக்கப்பட்டதாக ஷீனா தெரிவித்தார்.
எனினும் ஆசிரம கட்டிடத்தின் பின்பகுதியில் உள்ள தங்குமிடம் மற்றும் அரங்கம் அடங்கியுள்ள இரு கட்டிடங்கள், 31 தளங்களைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானத்திற்காக இடிக்கப்படும் என்றார் அவர்.
“ஆசிரமக் கட்டிடம் தற்போதுள்ள நிலையிலேயே நீடிக்கும். கட்டிடத்தைச் சுற்றி அதிர்வுகளைத் தாங்கக்கூடிய கருவிகள் பொருத்தப்படும். இதன் வழி அடுக்குமாடி கட்டுமானத்தின் காரணமாக ஆசிரமக் கட்டிடத்திற்கு பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்,” என்றார் ஷீனா.
பாரம்பரியமும், சரித்திரப் பின்னணியும் கொண்ட விவேகானந்தர் ஆசிரமம் பாதுகாக்கப்பட வேண்டும் என ஹிண்ட்ராஃப் சார்பில் அதன் தலைவர் பி.வேதமூர்த்தியும் அறிக்கையொன்றை ஏற்கனவே விடுத்திருந்தார்.