புதுடெல்லி, நவம்பர் 1 – சர்தார் வல்லபாய் படேல் இல்லாமல் மகாத்மா காந்தி முழுமை பெறமாட்டார் என படேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். சர்தார் வல்லபாய் படேலின் 139-வது பிறந்த நாள், தேசிய ஒற்றுமை தினமாக நேற்று கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி ‘ஒற்றுமை ஓட்டம்‘ என்ற பெயரில் ஏராளமானோர் கலந்து கொண்ட மாரத்தான், நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்தது. டெல்லியில் இதனை பிரதமர் மோடி கொடியசைத்து தொடக்கி வைத்தார். அதன் பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:
“அரசியல் வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை படேல் எதிர்கொண்டார். இருப்பினும், நாட்டின் ஒற்றுமை என்ற எண்ணத்தில் இருந்து அவர் ஒருபோதும் மாறியது கிடையாது. ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன்பாக அவருடைய பிறந்த நாளன்று, இந்திரா காந்தி கொல்லப்பட்டது துரதிருஷ்டவசமானது.”
“அதைத் தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்களால் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. ஆயிரமாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட நாட்டின் புகழையும், கலாசாரத்தையும் இந்த சம்பவம் பாதித்தது.”
“வரலாற்றை புறக்கணிக்கும் நாடு, வரலாற்றை உருவாக்க முடியாது என்பதை நாம் மறக்கக் கூடாது. வரலாற்றை பிளவுபடுத்த வேண்டாம். சுவாமி விவேகானந்தர் இல்லாமல், ராமகிருஷ்ண பரமஹம்சர் முழுமை பெறமாட்டார்.”
“அதேபோன்று, படேல் இல்லாமல் மகாத்மா காந்தி முழுமை பெறமாட்டார். சுதந்திரத்துக்குப் பிறகு, துண்டுத் துண்டாக பிரிந்து இருந்த இந்தியப் பகுதிகளை ஒருங்கிணைத்தார்.”
“தனி நபராக, 550 இந்தியப் பகுதிகளை இணைத்தார். இந்தியா ஒரு நாடாக உருவானதில் படேலின் பங்கை நாம் மறந்து விடக் கூடாது” என மோடி பேசினார்.
படேலின் பிறந்தநாள் நிகழ்ச்சியில், பிரபல விளையாட்டு வீரர்கள் சுஷில் குமார், விஜேந்தர் சிங், வீரேந்திர சேவக், கவுதம் காம்பீர் உள்ளிட்ட பிரபலங்களும், மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, வெங்கைய நாயுடு, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.