கோலாலம்பூர், நவம்பர் 3 – மாஸ் எம்எச்17 சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் கடைசி சடலமாக தமது பாட்டி புவான்ஸ்ரீ சித்தி அமினாவின் சடலம் மீட்கப்பட்டதாக தற்காப்புத் துறை அமைச்சரும், பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் நெருங்கிய உறவினருமான டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசேன் தெரிவித்தார்.
இது குறித்து ஹிஷாமுடின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இச்சம்பவத்தில் மரணமுற்ற 298 பேரின் சடலங்களும் அடையாளம் காணப்பட்டுவிட்டது.இதில் இறுதியாக எங்களது பாட்டியின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் அனைத்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் அவரவர் குடுபத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டனர்.இதன் மூலம் பிரதமர் நஜிப் துன் ரசாக் தமது வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதால் எனக்கு மிகவும் திருப்தியாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “அனைத்து பயணிகளின் நல்லுடல்களும் அடையாளம் கண்டு மீட்கப்பட்டு விட்ட போதிலும் சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என மலேசியர்கள் அனைவரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எங்கள் பாட்டியின் பிள்ளைகள் ஆம்ஸ்டர்டாமில் குடியிருப்பதால் அவரது சடலம் அங்கேயே புதைக்கப்பட்டு விட்டது. இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் நிச்சயம் நீதியின் முன் நிறுத்தப்படுவர்” என்று ஹிஷாமுடின் கூறியுள்ளார்.
கடந்த ஜூலை 17-ம் தேதி, எம்எச்17 விமானம் 15 விமான ஊழியர்கள் உட்பட 298 பேருடன் ஆம்ஸ்டர்டாமிலிருந்து, கோலாலம்பூருக்கு வந்து கொண்டிருந்த போது ரஷ்ய எல்லைப் பகுதிக்கு அருகே உள்ள உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்நிலையில் இதுவரை யாரும் அக்குற்றத்தை ஒப்புக்கொள்ள முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.