நியூயார்க், நவம்பர் 6 – உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் வரிசையில் மோடிக்கு 15-வது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் போர்ப்ஸ் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் புகழ்பெற்ற மனிதர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் செல்வாக்கு மற்றும் புகழ் இன்னும் பிற விதிகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தி வருகிறது.
இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து 72 தலைவர்கள் பல்வேறு பரிவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டனர். இந்த வரிசையில் ரஷ்ய அதிபர் முதலிடத்திலும், அமெரிக்க அதிபர் ஓபாமா இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
சீன அதிபர் ஷின்ஜின்பிங் 3-வது இடம், போப் பிரான்சிஸ் 4-வது இடம், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் 5-வது இடமும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்திய பிரதமர் மோடி 15 வது இடத்தில் உள்ளார். அதே போல் இந்தியாவை சேர்ந்த அனில் அம்பானி 36-வது இடத்திலும் , ஆர்சிலர் மிட்டல் நிறுவத்தின் தலைமை நிர்வாகியான லட்சுமி மிட்டல் 57-வது இடத்திலும், மைக்ரோ சாப்ட் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள இந்தியர் சத்யநாதெல்லா 64-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்தாண்டு பட்டியலில் இந்திய பிரதமர் மோடி மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் அசிஸி உட்பட 12 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மோடி தன்னுடைய குஜராத் மாநிலத்தை முன்னேற்றிய விதத்தை பாராட்டியும், நடந்து முடிந்த தேர்தல் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தை சீர் படுத்துவதில் இந்தியர்கள் மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் இந்திய மக்களையும் கவர்ந்ததாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
மேலும் கடந்தாண்டு இதே பத்திரிகை வெளியிட்ட செல்வாக்கு பெற்ற தலைவர்கள் வரிசையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவிற்கு 21-வது இடம் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.