ஜார்ஜ் டவுன், நவம்பர் 8 – பினாங்கில் கடந்த 3 நாட்களில் மட்டும் தலைவெட்டப்பட்ட நிலையில் இரண்டு பெண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், இந்த இரண்டு கொலைகளுக்கும், இந்த வருடத்தில் நடந்த 17 மியான்மர் ஆடவர்களின் கொலைகளுக்கு தொடர்பு இருக்கலாம் என பேச்சு நிலவுகின்றது.
காரணம், கொலை செய்யப்பட்ட அனைவரும் கழுத்து அறுக்கப்பட்டு இருட்டு சந்துகள் மற்றும் சாலையோரங்களில் வீசப்பட்டுள்ளனர்.
இந்த தொடர் கொலை சம்பவங்கள் அனைத்திற்கும் பயங்கர கொலையாளி காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், பினாங்கு காவல்துறை மூத்த துணை ஆணையர் டத்தோ வீரா அப்துல் ரஹிம் ஹனாபி தொடர் கொலையாளி குறித்த சந்தேகங்களை மறுத்துள்ளார்.
வீண் வதந்திகளைக் கிளப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை, ஜாலான் கெபுன் பூங்கா அருகே பெட்டி ஒன்றில் பெண்ணின் உடம்பு மற்றும் கைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நேற்று அந்த பகுதியில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் நிபோங் திபால் அருகே அதே போன்ற மற்றொரு பெண்ணின் உடல் மற்றும் கால்கள் பெட்டி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வருடம் நடந்த கொலைகளில் இது மிக பயங்கரமான கொலைகள் என்று வீரா அப்துல் ரஹிம் குறிப்பிட்டுள்ளார்.
அந்த இரு பெண்களில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகின்றனர். எனினும் மரபணு சோதனை மற்றும் கைரேகை தடயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.