டெல்லி, நவம்பர் 11- வரும் 24-ஆம் தேதி இலங்கைக்கு செல்கிறேன். திரும்பி வருகையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களுடன் வருவேன் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
அவர்கள் மீது போதைப் பொருள் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கொழும்பு உயர் நீதிமன்றம் அந்த 5 பேருக்கும் மரண தண்டனை விதித்தது.
இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர்களை இந்திய சிறைக்கு மாற்ற ராஜபக்சே ஒப்புக் கொண்டுள்ளார்.
இது குறித்து சாமி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ராஜபக்சே, மோடிஜி இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் பற்றி பேசியுள்ளனர்.”
“மேலும் விரைவில் மீனவர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறார்களாம். வரும் 24-ஆம் தேதி நான் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளேன். திரும்பி வருகையில் மீனவர்களுடன் வருவேன்” என்று தெரிவித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.