Home நாடு தடை செய்யப்பட்ட மருந்தை நீண்டகாலமாக பயன்படுத்தி வந்தார் சோங் வெய் – முன்னாள் வீரர் சிடேக்...

தடை செய்யப்பட்ட மருந்தை நீண்டகாலமாக பயன்படுத்தி வந்தார் சோங் வெய் – முன்னாள் வீரர் சிடேக் பகிரங்கம்

787
0
SHARE
Ad

Razif Sidek-former Badminton Playerகோலாலம்பூர், நவம்பர் 12- தடை செய்யப்பட்டிருந்த ஊக்க மருந்தை உலகின் முதல் நிலை வீரரான டத்தோ லீ சோங் வெய் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்ததாக முன்னாள் தேசிய பூப்பந்து வீரர் ரசிப் சிடேக் (படம்) தெரிவித்துள்ளார்.

மலேசிய பூப்பந்து சங்கத்தைச் சேர்ந்த பல அதிகாரிகளுக்கும் சோங் வெய் அம்மருந்தைப் பயன்படுத்துவது தெரியும் என அவர் குற்றம்சாட்டி உள்ளார். இதற்காகவே வெளிநாட்டு மருத்துவர் ஒருவரை சோங் வெய் பணிக்கு அமர்த்தி இருந்ததாகவும் சிடேக் பகிரங்கப்படுத்தி  உள்ளார்.

“எனினும் உலகின் முதல் நிலை வீரர் என்பதால் அவருக்கு எதிராக வாய் திறக்க தயங்கினர். மேலும் தகுந்த ஆதாரங்கள் இன்றி பேச முடியவில்லை. தற்போது அவரே சிக்கியுள்ளார். அவர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்த விரும்பவில்லை. ஆனால் இது நீண்ட காலமாக நடந்து வந்துள்ளது,” என்றார் சிடேக்.

#TamilSchoolmychoice

Lee Chong Wei“மூத்த வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் இது தெரியும். இளம் வீரர்களுக்கு இது லேசாக தெரிய வந்தாலும், சோங் வெய் இத்தேசத்தின் நாயகனாக இருந்தார். எனக்குத் தெரிந்தவரை தடைசெய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்துவதற்காகவே ஒரு வெளிநாட்டு மருத்துவரை அவர் மலேசியாவுக்கு வரவழைத்தார். இதுகுறித்து ஏற்கெனவே நான் கூறியதில்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் சிடேக்.

ஒருவர் மீது கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகளை சுமத்தும் வழக்கம் தமக்கில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், தமக்கு தெரிந்த விவரங்கள் பூப்பந்து சங்கத்தைச் சேர்ந்த மேலும் பலருக்குத் தெரியும் என்றார்.

இதற்கிடையே உலக பூப்பந்து சம்மேளனத்திடம் அறிக்கை அளிக்கும் விஷயத்தில் சோங் வெய்க்கு முழுமையான ஆதரவு அளிக்க இருப்பதாகவும் தேசிய பூப்பந்து ஒற்றையர் பிரிவு பயிற்சியாளரான சிடேக் மேலும் கூறியுள்ளார்.

“முதலிடத்தைப் பிடிக்க குறுக்கு வழிகள் இல்லை என்ற கொள்கையில் சோங் வெய் உறுதியாக இருந்ததை ஒப்புக் கொள்கிறேன்,” என்றார் சிடேக்.