பீஜிங், நவம்பர் 13 – ஆசியா-பசிபிக் பொருளாதார கூட்டுறவு அமைப்பின் தலைவர்களிடையே பீஜிங்கில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக அரசுமுறைப் பயணமாக சீனாவுக்கு வருகைதந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு பீஜிங் விமான நிலையத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் சிகப்பு கம்பள வரவேற்பு அளித்தார்.
இந்த மாநாட்டுக்கு பின்னர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த ஒபாமா, வளர்ந்த நாடுகளான சீனா-அமெரிக்கா இடையில் நிலவும் நட்புறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் வழிமுறைகள் பற்றி ஆலோசனை நடத்தினார்.
முக்கியமான பிரச்சனைகளை இரு நாட்டு தலைவர்களும் மேலும் நெருக்கமாக அணுகி, அவ்வப்போது தொடர்பு கொண்டு, தங்களது ஆழ்ந்த கருத்துகளை பரிமாறிக் கொள்ள வேண்டும் என ஒபாமாவிடம் ஜி ஜின்பிங் வலியுறுத்தினார்.
பொருளாதார பலத்தில் உலகின் இரு மிகப்பெரிய நாடுகளாகவும், உடல் ஆற்றலும், படைப்பாற்றலும் கொண்ட மக்களை பெற்ற நாடுகளாகவும் அறியப்படும் அமெரிக்கா-சீனா இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதன் மூலம் இரு நாட்டு மக்கள் மட்டுமல்ல; உலகில் உள்ள அனைத்து மக்களும் ஆதாயம் அடைவார்கள் என்று இந்த சந்திப்பின்போது ஒபாமா கூறினார்.
சீன அதிபர் வலியுறுத்தியது போலவே முக்கியமான பிரச்சனைகளில் ஜி ஜின்பிங்கை உடனுக்குடன் தொடர்பு கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்ல தானும் விரும்புவதாகவும் ஜி ஜின்பிங் குறிப்பிட்டார்.