கோலாலம்பூர், நவம்பர் 18 – நட்பு ஊடகங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ்புக், தற்போது அலுவலக பணிகளுக்கென மட்டும் தனித்த பதிப்பினை ஏற்படுத்த திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அலுவலக ரீதியிலான பணிகள், வர்த்தக செயல்பாடுகள் போன்றவற்றினை மேம்படுத்திக் கொள்ள பல்வேறு இணைய தளங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக ‘லிங்கிட் இன்’ (LinkedIn), ‘சேல்ஸ்போர்ஸ்.காம்’ (Salesforce.com) போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை ஆகும். எனினும், இவற்றின் செயல்பாடு சில நாடுகளில் மட்டுமே சிறப்பாக உள்ளன.
இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் பணியாளர்களின் அலுவல்கள், கலந்தாய்வுகள், துறை சார்ந்த செயல்பாடுகளை மேம்படுத்த, பகிர்ந்து கொள்ள புதிய தளத்தை உருவாக்கி வருகின்றது. ‘பேஸ்புக் அட் ஒர்க்’ (Facebook At Work) என்ற பெயரில் உருவாகி வரும் இந்த புதிய தளத்தில், பல்வேறு ஆச்சரியங்கள் காத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. அடுத்த சில மாதங்களுக்குள் இந்த புதிய திட்டத்தினை செயல்படுத்த பேஸ்புக் நிறுவனம் பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
இந்த புதிய தளம் வழக்கமான பேஸ்புக் பக்கத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்றும், பயனர்களுக்கு இது தொழில் சார்ந்த புதிய அனுபவத்தை ஏற்படுத்தும் என்றும் பேஸ்புக் வட்டாரங்கள் கூறுகின்றன.
தற்சமயம், லண்டனில் செயல்படும் பேஸ்புக் நிறுவனத்தின் ஓர் ஆராய்ச்சிக் குழு, இந்த புதிய தளத்தை வடிவமைத்து உள்ளதாகவும், இதன் சோதனை முயற்சியாக அங்குள்ள சிறிய நிறுவனங்களுக்கு இந்த புதிய தளத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.