சென்னை, நவம்பர் 18 – லிங்கா படம் பத்து படையப்பாவுக்கு சமம் என்று இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார். லிங்கா படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பாடலாசியர் வைரமுத்து, இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
ரஜினி மனிதநேயம் உள்ளவர் என்று இயக்குநர் முத்துராமன் தெரிவித்தார். அவரது உள்ளத்தில் பொய் இல்லை அதனால்தான் உலகத்தில் உள்ளவர்களின் மனதில் வாழ்கிறார். இந்த படத்தின் வெற்றி விழாவையொட்டி ரசிகர்களை ரஜினி சந்திக்க வேண்டும் என்று கூறினார்.
விழாவில் பேசிய வைரமுத்து, “ரஜினி மனதை யாராலும் அளக்க முடியாது என்றார். இங்கு பேசியவர்கள் ரஜினியை தலைவர் என்றனர். கடவுள் என்றனர். தெய்வம் என்றனர். இப்படி புகழ்ந்து பேச அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதை எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற திறமை ரஜினியிடம் மட்டும்தான் இருக்கிறது” என்றார்.
“ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்று கால் நூற்றாண்டுகளாக விவாதம் நடக்கிறது. எந்த முடிவையும் அவர் மீது திணிக்க முடியாது. அவர் முடிவு எடுத்தால் அதை யாராலும் தடுக்க முடியாது” என்றார் வைரமுத்து.
பிரம்மாண்ட இயக்குனர் என்று என்னை எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், லிங்கா படத்தின் முன்னோட்டம், பாடல்களை பார்த்தபிறகு இதுதான் பிரம்மாண்டமாக இருக்கிறது என்று இயக்குனர் ஷங்கர் கூறினார்.
ஒரு படத்தை எவ்வளவு சீக்கிரம் எடுக்க வேண்டும் என்பதை கே.எஸ்.ரவிக்குமாரிடம் கற்றுக் கொள்ளவேண்டும். ‘லிங்கா’ படம் பத்து படையப்பாவுக்கு சமம் என்றும் புகழ்ந்தார் ஷங்கர்.