Home தொழில் நுட்பம் இனி ‘ஃபயர்பாக்ஸ்’-ன் முதல் பக்கம் கூகுள் அல்ல யாஹூ!

இனி ‘ஃபயர்பாக்ஸ்’-ன் முதல் பக்கம் கூகுள் அல்ல யாஹூ!

462
0
SHARE
Ad

Yahooசான் பிரான்ஸிஸ்கோ, நவம்பர் 22 – ‘யாஹூ’ (Yahoo) நிறுவனம், ‘ஃபயர்பாக்ஸ்’ (Firefox) உலாவியின் தயாரிப்பு நிறுவனமான மொசில்லாவுடன் முக்கிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்காவில் ஃபயர்பாக்ஸ் உலாவியின் முதல் பக்கமாக இருந்த கூகுளுக்கு பதில் யாஹூ உலவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை யாகூ உடனான புதிய ஒப்பந்தம் பற்றி அறிவித்ததன் மூலம் மொசில்லா நிறுவனம், கூகுளுடனான 10 வருட வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

கடந்த 2008-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் ‘கூகுள் குரோம்’ (Google Chrome) உலாவியை அறிமுகப்படுத்தியது. குரோம்-ன் வரவு, உலக அளவில் மொசில்லா நிறுவனத்திற்கு பெரும் வர்த்தக பாதிப்பினை ஏற்படுத்தியது. அதன் காரணமாக இரு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. இந்நிலையில் மொசில்லா, இம்மாத இறுதியுடன் நிறைவு பெறும் கூகுளுடனான பழைய ஒப்பந்தத்தை புதுப்பிக்காது, யாஹூ உடன் புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து யாஹூ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மரிஸ்ஸா மேயர் கூறுகையில், “மொசில்லாவுடனான இந்த புதிய ஒப்பந்தம் சரிந்து வரும் தேடல் சந்தையின் பங்கை அதிகரிக்க உதவும். எனினும், இரு நிறுவனங்களுக்கிடையேயான நிதிக்கட்டுப்பாடுகள் இன்னும் முடிவாகவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் யாஹூவைக் காட்டிலும் கூகுளின் தேடல் தளத்தையே அதிக பயனர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிலை உலக அளவில் பிரதிபலிக்கின்றது. மொசில்லாவுடனான இந்த புதிய ஒப்பந்தம் யாஹூவிற்கு மாறுதலை ஏற்படுத்தும் என அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.