Home நாடு சரவாக் நிலக்கரி சுரங்க வெடி விபத்து 3 பேர் பலி; 26 பேர் காயம்

சரவாக் நிலக்கரி சுரங்க வெடி விபத்து 3 பேர் பலி; 26 பேர் காயம்

528
0
SHARE
Ad

Sarawak mapகூச்சிங், நவம்பர் 23 – சரவாக் தலைநகர் கூச்சிங்கிலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஸ்ரீ அமான் அருகே உள்ள பந்து நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடி
விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். மேலும் 26 பேர் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவத்தால் சரவாக்கில் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்த விபத்து நேற்று காலை 9 மணி அளவில் நிகழ்ந்தது என்றும் பலியான 3 பேரும்
இந்தோனேசியா, வடகொரியா மற்றும் மியான்மரைச் சேர்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் என்றும் ஸ்ரீ அமான் மாவட்ட காவல்துறை தலைவர் டி.எஸ்.பி மட் ஜுசோ முகமட் தெரிவித்தார். எனினும் பலியானவர்கள் குறித்த கூடுதல் தகவல்கள் இன்னும்
கிடைக்கவில்லை என்றார் அவர்.

#TamilSchoolmychoice

சுரங்கத்தில் பயன்படுத்தப்பட்ட பழுதடைந்த ஒரு மின்விசிறியில் இருந்து உருவான தீப்பொறிகள் காரணமாகவே இந்த விபத்து நேரிட்டதாக மட் ஜுசோ மேலும் கூறினார். சுமார் 69 மீட்டர் ஆழத்தில் இந்தக் கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

“இந்த விபத்து சமயத்தில் சுரங்கப் பணியில் இருந்த 29 தொழிலாளர்கள் தங்களை
காப்பாற்றிக் கொள்ள சுரங்கத்திலிருந்து வேகமாக வெளியேறி உள்ளனர். மேலும்
படுகாயம் அடைந்த சக தொழிலாளர்கள் சிலரையும் காப்பாற்றி உள்ளனர்.

“விபத்தில் பலியான 3 பேரின் உடல்கள் சவப்பரிசோதனைக்காக ஸ்ரீ அமான்
மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. காயமடைந்த 16 பேருக்கும் அதே
மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் 10 பேருக்கு செடா
பந்து கிளினிக் மற்றும் செரியா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை
அளிக்கப்பட்டது,” என்றார் மட் ஜுசோ.

எட்டு வருடங்களாகச் செயல்பட்டு வரும் இச்சுரங்கத்தில் சீனா, மியான்மர், இந்தோனேசியா, வங்காள தேசம் மற்றும் வடகொரியாவைச் சேர்ந்த 119 அந்நிய தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.