கார்கிவ் (உக்ரேன்), நவம்பர் 24 – இதுநாள் வரை எம்எச் 17 விமானம் உக்ரேனில் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதியில் எஞ்சியிருந்த சேதமடைந்த பொருட்கள் அப்புறப்படுத்தப்படாமல் இருந்தன. காரணம், உக்ரேனில் உள்ள போராளிக் குழுக்களின் ஆக்கிரமிப்பில் இருந்த அந்தப் பகுதிகளில் ஆய்வுப் பணிகளுக்காக நுழைவதற்கு விமான விபத்து மீதிலான புலனாய்வுக் குழுக்களுக்கு அனுமதி கிடைப்பதில் சிரமங்கள் இருந்தன.
தற்போது அனுமதி வழங்கப்பட்டு சிதிலமடைந்த பொருட்களும், எம்எச் 17 விமானப் பேரிடரின் எஞ்சிய பொருட்களும் இரயில்கள் மூலம் பரிசோதனைகளுக்காக அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
சிதிலமடைந்த பொருட்களை ஏற்றியிருக்கும் இரயில் வண்டி இன்று உக்ரேனின் கார்கிவ் நகரில் நின்றிருக்கும் காட்சியைத் தான் மேலே பார்க்கிறீர்கள்.
போராளிக் குழுக்களின் ஆக்கிரமிப்பில் இருக்கும் உக்ரேனின் டோரஸ் என்னும் பகுதியைக் கடந்து கார்கிவ் என்னும் நகருக்கு பரிசோதனைகளுக்காக இந்த சிதிலப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அங்கிருந்து நெதர்லாந்து நாட்டிற்கு பரிசோதனைகளுக்காகவும், ஆய்வுக்காகவும் இந்தப் பொருட்கள் அனுப்பப்படும்.
கடந்த ஜூலை மாதம் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச் 17 மாஸ் விமானத்தில் இருந்த 298 பயணிகள், பணியாட்கள் அனைவரும் உயிரிழந்தனர்.
படங்கள்: EPA