Home நாடு அசுந்தா மருத்துவமனையின் செயல்பாடு வெட்கக்கேடானது – சிவராஜா கடும் கண்டனம்

அசுந்தா மருத்துவமனையின் செயல்பாடு வெட்கக்கேடானது – சிவராஜா கடும் கண்டனம்

682
0
SHARE
Ad

Sivarraajhகோலாலம்பூர், நவம்பர் 25 – அண்மையில் காலமான இளம்பெண் டினாஷாவின் மருத்துவ அறிக்கையை அவரது குடும்பத்தாரிடம் அசுந்தா மருத்துவமனை கொடுக்க மறுப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக மஇகா இளைஞர் பிரிவு தலைவர் சிவராஜா (படம்) தெரிவித்துள்ளார்.

இவ்விஷயத்தில் அம்மருத்துவமனை வெளிப்படையாகவும், நிபுணத்துவத்துடனும்
செயல்பட்டு மருத்துவ அறிக்கையை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என அவர்
வலியுறுத்தி உள்ளார்.

“மருத்துவமனை நிர்வாகத்தின் தாமதத்தால் ஏற்கெனவே இழப்பில் உள்ள அப்பெண்ணின் குடும்பத்தாரது மன உளைச்சலும் வேதனையும் மேலும் அதிகரிக்கும். பாதிக்கப்பட்டவர்களை மேலும் அலைக்கழிப்பதன் மூலம் அசுந்தா மருத்துவமனை வெளிப்படையாகவும் நிபுணத்துவத்துடனும் செயல்படவில்லை என்பது புலனாகிறது,” என்று அறிக்கை ஒன்றில் சிவராஜா கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் அம்மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரியான பீட்டர் லியோங்கின்
முரட்டுத்தனமான, அராஜகமான போக்கை கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மருத்துவ அறிக்கையை சுகாதாரத்துறை அமைச்சின் மூலம் பெற வேண்டும் என
பீட்டர் லியோங் கூறியிருப்பதை இதுவரை எங்கும் கேள்விப்பட்டதே இல்லை. இது
மருத்துவ அறிக்கையை அளிப்பதில் தாமதத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் டினாஷாவின் குடும்பத்தாரை மேலும் குழப்பும் செயல். ஏற்கெனவே மகளை இழந்து, மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ள அக்குடும்பத்தாருக்கு இது மேலும் குழப்பத்தை தரும்,” என சிவராஜா தெரிவித்துள்ளார்.

டினாஷாவின் குடும்பத்தார் மருத்துவமனை மீது இரண்டாவது முறையாக  காவல்துறையிடம் முறையிட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், வழக்கறிஞரை
அமர்த்த அவர்கள் முடிவு செய்திருப்பதாகவும் கூறினார்.

“அசுந்தா மருத்துவமனையின் இச்செயல் வெட்கக்கேடானது. துக்கத்தில் உள்ள ஒரு
பெற்றோரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாத ஒரு தனி மனிதரால்தான்
இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது,” என்று சிவராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.