கோலாலம்பூர், நவம்பர் 30 – சோனி நிறுவனம் தனது திறன்பேசிகள் மற்றும் தொலைக்காட்சிகள் தயாரிப்பினை குறைத்துக் கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து 5 காலாண்டுகளாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பினை ஈடு செய்யவே இந்த முடிவினை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சோனி, திறன்பேசிகள், தொலைக் காட்சிகள், ப்ளே ஸ்டேஷன், கேமரா என பலவேறு மின்சாதனக் கருவிகளைத் தயாரித்து வருகின்றது.
சோனி நிறுவனம் அறிமுகப்படுத்திய ‘எக்ஸ்ப்ரியா’ (Xperia) திறன்பேசிகள் ஆரம்பத்தில் பயனர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், அதற்கு அடுத்தடுத்து வந்த தொடர் வரிசைகள் பயனர்களின் தொழில்நுட்பத் தேவைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பொருளாதார சரிவைச் சந்தித்தன. இதன் காரணமாக சோனி நிறுவனம் தொடர்ந்து 5 காலாண்டுகளாக கடும் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றது.
இந்நிலையில், சோனி நிறுவனம் தனது எக்ஸ்ப்ரியா வரிசை திறன்பேசிகளின் தயாரிப்பினை குறைத்துக் கொள்ளவதாக அறிவித்துள்ளது. மேலும், தங்கள் நிறுவனத்திற்கு நிகர லாபத்தை ஏற்படுத்தும் ப்ளே ஸ்டேஷன், கேமரா மற்றும் ‘உணர்த்திகள்’ (Sensor) தயாரிப்பினை அதிகரிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
சோனி நிறுவனத்தின் புதிய தலைவர் ஹிரோகி டோடோகி கூறுகையில், “திறன்பேசிகள் வர்த்தகத்தில் இருந்து முற்றிலும் வெளியேறுவது என்பது தற்சமயம் இயலாத காரியம். அதற்கு அடிப்படையான சில மாற்றங்களை செய்தாக வேண்டும். எனினும், பொருளாதார இழப்பினை அதிகப்படுத்தும் திறன்பேசிகளின் வர்த்தகத்தை குறைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.