Home உலகம் செயற்கைத் தீவு விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்! 

செயற்கைத் தீவு விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்! 

524
0
SHARE
Ad

பெய்ஜிங், நவம்பர் 29 – தென் சீனக்கடல் பகுதியில் சீனா, செயற்கைத் தீவு ஒன்றை உருவாக்கி வருவது தொடர்பாக அமெரிக்க செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகின. சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் கட்டுமான பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

South China sea disputed islands
சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலின் தீவுப் பகுதிகள்

தென் சீனக்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு கூட்டங்களுக்கு சீனா, மலேசியா, வியட்நாம், புருணை, தைவான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன. எனினும், சீனா அந்தப் பகுதி முழுவதும் தங்கள் நாட்டிற்கு சொந்தமானது என்று கூறி வருகின்றது. மேலும் அங்கு பல்வேறு தீவுகளையும், கட்டுமான அமைப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றது.

ஏற்கனவே , அந்தப் பகுதியில் 3 தீவுகளை உருவாக்கி உள்ள சீனா, அங்கு விமான ஓடுதளத்துடன் கூடிய நான்காவது தீவை உருவாக்கி வருவதாக அமெரிக்கா, செயற்கைக் கோள் புகைப்படங்களுடன் ஆதாரத்தை வெளியிட்டது.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், “தென் சீனக்கடல் பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் கட்டுமானப்பணிகளால், அங்கு பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது” என்று அவர் கூறியுள்ளார். எனினும் அமெரிக்காவின் இந்த கருத்திற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

செயற்கைத் தீவு விவகாரம் தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹூவா சுனியிங் கூறுகையில், “குறிப்பிட்ட அந்தத் தீவில் நிறுத்தப்பட்டுள்ள படையினரின் நலனுக்காகவே கட்டுமானப் பணிகளை எங்கள் நாடு மேற்கொண்டு வருகின்றது. இது குறித்து பொறுப்பற்ற விமர்சனங்களை அந்நிய சக்திகள் கூறவதற்கு உரிமையில்லை” என்று அவர் கூறியுள்ளார்.