காத்மாண்டு, நவம்பர் 27 – இந்தியா-பாகிஸ்தான் இடையே தடைபட்டுப்போன பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க, இந்தியாவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார். சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக காத்மாண்டு சென்றுள்ள அவர், இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
“இந்தியா-பாகிஸ்தான் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற பாகிஸ்தான் பெரும் முயற்சிகளை எடுத்தது. அது நடைபெற இருந்த சூழ்நிலையில் இந்தியா தன்னிச்சையாகவே அதனை ரத்து செய்தது. அதனால் இரு நாடுகளுக்குள் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க இந்தியாவே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த ஆகஸ்ட் மாதம் 25–ம் தேதி இஸ்லாமாபாத் நகரில் வெளியுறவு செயலாளர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்து இருந்தன.
எனினும், பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடைபெற இருந்த தருணத்தில், காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால், இந்தியா, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை திடீரென ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது