Home நாடு தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்பா? 3 மலேசியர்கள் கைது: காலிட் தகவல்

தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்பா? 3 மலேசியர்கள் கைது: காலிட் தகவல்

500
0
SHARE
Ad
khalid
காலிட் அபு பாக்கார்

கோலாலம்பூர், டிசம்பர் 2 – ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பில் சேர்வதற்காக மலேசியர்களுக்கு பண விநியோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 3 பேரை காவல்துறை தடுத்து வைத்துள்ளது. அவர்களில் இருவர் அரசு ஊழியர்களாவர்.

“புக்கிட் அமானின் தீவிரவாத தடுப்புப் பிரிவானது கோலாலம்பூரிலும் கெடாவிலும் கடந்த நவம்பர் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் மேற்கொண்ட நடவடிக்கைகளின்போது மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்,” என்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் காவல்துறை தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கர் தெரிவித்துள்ளார்.

கைதான அனைவரும் மலேசியர்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், மூவரும் 23 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் என கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“இவர்களில் ஒருவர் சிரியாவில் இயங்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்தவர். கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி முதல் அந்த அமைப்பில் இணைந்து செயல்பட்ட அந்நபர் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி நாடு திரும்பியுள்ளார். 23 மற்றும் 28 வயதான மற்ற இருவரும் கோலாலம்பூரில் உள்ள அரசுத்துறையின் ஊழியர்கள் ஆவர்,” என்று  காலிட் அபுபாக்கர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி முதல் இதுவரை சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட மலேசியர்கள் தீவிரவாத செயல்களுடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.