Home அவசியம் படிக்க வேண்டியவை புதிய டெங்கி தடுப்பு மருந்து பரிசோதனை – டாக்டர் சுப்ரா தகவல்

புதிய டெங்கி தடுப்பு மருந்து பரிசோதனை – டாக்டர் சுப்ரா தகவல்

467
0
SHARE
Ad
Dr-S.-Subramaniam
டாக்டர் எஸ்.சுப்ரமணியம்

ஈப்போ, டிசம்பர் 5 – மலேசிய சுகாதார அமைச்சு உலகிலேயே முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெங்கி தடுப்பு மருந்து மீதான மருத்துவ பரிசோதனைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்த தடுப்பு மருந்து விற்பனை சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த தகவலைத் தெரிவித்த சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், இந்த டெங்கி தடுப்பு மருந்தின் நீண்ட கால பயன்பாடு குறித்த முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று கூறினார்.

“இந்த தடுப்பு மருந்து குறித்த ஆய்வறிக்கைகளை ஆராய்ந்து வருகின்றோம். இதனை நாம் பயன்படுத்துவதற்கு முன்னால் இதற்கான ஆதாரங்களை பரிசோதனைகள் மூலம் திரட்டி வருகின்றோம்” என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

தற்போது டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களில் அதிகமானோர் 25 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்றும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வாரத்திற்கு 3,000 ஆக இருந்த டெங்கி நோய் கண்டவர்களின் எண்ணிக்கை தற்போது வாரத்திற்கு 2,300ஆக குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

“நான் தொடக்கி வைத்த டெங்கிக் காய்ச்சலைக் குறைக்கும் பிரச்சாரத் திட்டம் வெற்றியடைந்துள்ளதை இது குறிக்கின்றது. நாளடைவில் எங்களின் இலக்கான வாரத்திற்கு 1,500 டெங்கி நோய் எண்ணிக்கை மட்டுமே என்பதை நாங்கள் அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது” என்றும் சுப்ரா தெரிவித்தார்.

நேற்று ஈப்போவிலுள்ள சுல்தான் அஸ்லான் ஷா சுகாதார விஞ்ஞானக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் டாக்டர் சுப்ரா பத்திரிக்கையாளர்களிடம் இந்த தகவலைத் தெரிவித்தார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் சுமார் 4,000க்கும் மேற்ப்பட்டவர்கள் பயிற்சிச் சான்றிதழ்களையும், டிப்ளமா தகுதி கொண்ட சான்றிதழ்களையும் பெற்றனர்.