சென்னை, டிசம்பர் 12 – பத்து கோடி ரூபாயை வைப்புத்தொகை செய்த பிறகு, “லிங்கா’ திரைப்படத்தை திரையிடலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த ரவிரத்தினம் “லிங்கா’ திரைப்படத்தை வெள்ளிக்கிழமை (டிசம்பர்.12) வெளியிடத் தடை விதிக்குமாறு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
“முல்லைவனம் 999′ என்ற பெயரில் தான் பதிவு செய்த கதையை திருடி “லிங்கா’வைத் தயார் செய்துள்ளதாகவும், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடுமாறும் அவர் மனுவில் கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த தனி நீதிபதி, மனுவைத் தள்ளுபடி செய்து அண்மையில் உத்தரவிட்டார். கதை திருட்டு தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் தேடிக்கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ரவிரத்தினம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இவ்வழக்கில், வியாழக்கிழமை வழக்குரைஞர்கள் விவாதம் நடைபெற்றது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பீட்டர் ரமேஷ்குமார், கதையைத் திருடியதாகப் புகார் அளித்த பிறகு மனுதாரரை மட்டுமே போலீஸார் விசாரித்துள்ளனர். திரைப்படக் குழுவை விசாரிக்கவில்லை. இதில் உச்ச நீதிமன்ற உத்தரவை போலீஸார் மீறியுள்ளனர்.
மனுதாரர் பல ஆண்டுகள் உழைத்து “முல்லைவனம்’ கதையைத் தயார் செய்துள்ளார். படம் தயாரிக்க இதுவரை ரூ.3.5 கோடி செலவழித்துள்ளார்.
இந்த கதை “லிங்கா’ என்ற பெயரில் வெளிவந்தால் மனுதாரரின் உழைப்பு வீணாகிவிடும். நாங்கள் கதையை சமர்ப்பிக்கத் தயார். எதிர் தரப்பு கதையையும் பெற்று முடிவு செய்ய வேண்டும் என்றார்.
“லிங்கா’ படக்குழு சார்பில் வாதாடிய வழக்குரைஞர் சஞ்சய் ராமசாமி, கதை திருட்டு தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் தான் பரிகாரம் தேட முடியும். தனி நீதிபதி உத்தரவில் குறையில்லை என்றார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
“இவ்வழக்கைப் பொருத்தவரை தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறை கிடையாது. மனுதாரர் பரிகாரம் தேட உரிய நீதிமன்றத்தையே அணுக வேண்டும்.
இருப்பினும் படம் வெளியான பிறகு மனுதாரருக்கு ஏற்படும் பாதிப்பையும், பெரிய அளவில் செலவு செய்து படம் தயாரித்து உள்ளதால், படம் வெளியாகாவிட்டால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது”.
‘மனுதாரருக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் உரிய இழப்பீடு வழங்கத் தயார் என எதிர்தரப்பினர் தெரிவித்துள்ளனர். எனவே படத்தை திரையிடும் முன்பு ரூ.3 கோடியை ரொக்கமாக உயர்நீதிமன்ற வங்கிக் கிளையில் செலுத்த வேண்டும்.
மேலும் ரூ. 2 கோடியை ரொக்கமாகவும் ரூ.5 கோடியை வங்கி உத்தரவாதமாகவும் திங்கள்கிழமை செலுத்த வேண்டும். இந்த உத்தரவு கிடைத்த 4 வாரங்களில் உரிய நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து நிவாரணம் தேடிக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்.