புதுடெல்லி, டிசம்பர் 17 – கூகுள் தனது தேடுபொறியில் இந்தியிலும் விளம்பரங்களை வெளியிட தீர்மானித்துள்ளது. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், தனது தேடுபொறியில் பல்வேறு நிறுவனங்களின் விளம்பரங்களை வெளியிடுவதன் மூலமாக, பல மில்லியன் டாலர்களை இலாபமாக ஈட்டி வருகின்றது.
இதுவரை ஆங்கிலத்தில் வெளியாகிக் கொண்டிருந்த விளம்பரங்களை, இனி இந்தியிலும் வெளியிட இருப்பதாக அந்நிறுவனம் சமீபத்தில் தெரிவித்துள்ளது. விரைவில் தமிழ் உட்பட முக்கிய இந்திய மொழிகளில், விளம்பரங்களை வெளியிட இருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பிற்கு முக்கியக் காரணம், உலக அளவில் சுமார் 500 மில்லியன் மக்கள் இந்தி மொழியை பேசுகின்றனர்.
அவர்களில் பெரும்பாலானோரின் விருப்பம், தாங்கள் தினசரி பயன்படுத்தும் தொழில்நுட்பப் பயன்பாடுகளிலும் இந்தி இருக்க வேண்டும் என்பதாகும்.
அந்த வகையில், கூகுள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தி மொழியில் குரல் வழி இணையத் தேடலை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தி விளம்பரங்கள் தொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
“கூகுள் குரல் வழித் தேடலில் இந்தி மொழி அறிமுகப்படுத்தப்பட்டது போல், விளம்பரங்களிலும் இந்தியை புகுத்த உள்ளோம். இதன் மூலம் இந்தி மொழி சார்ந்த இணைய வளர்ச்சி பெருகும்”.
“எதிர்காலத்தில் மற்ற இந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்” என்று அந்நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் இணையத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் மூலம் இணைய வர்த்தகமும் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி உள்ளது.
உலக நிறுவனங்கள், இந்தியாவை மையப்படுத்தி தனது வர்த்தகத்தை அதிகரித்து வரும் நிலையில், கூகுள் இந்திய வட்டார மொழியிலேயே விளம்பரங்களை வெளியிட தீர்மானித்திருப்பது, உலக விளம்பரதாரர்களுக்கு மிகுந்த பயனை அளிப்பதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.