சிட்னி, டிசம்பர் 17 – மதத்தை அடிப்படையாகக் கொண்டு உலகின் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதலுக்கு, ஆஸ்திரேலியர்கள் உணர்வுப் பூர்வமாக பதிலடி அளித்துள்ளனர்.
சிட்னி தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலியர்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவாக உருவாக்கிய ‘ஹாஷ்டேக்’ (Hashtag) மனிதம் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதி, அங்குள்ளவர்களை பிணையக் கைதியாக பிடித்து வைத்துக்கொண்டு மிரட்டிய சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
எனினும், ஆஸ்திரேலிய அதிரடிப்படை உணவகத்திற்குள் அதிரடித் தாக்குதல் நடத்தி தீவிரவாதியைக் கொன்று அங்குள்ளவர்களை மீட்டது. இரண்டு பேர் பலியான இந்த சம்பவத்தால், ஆஸ்திரேலியாவில் வசித்த முஸ்லிம்கள் பயம் கலந்த சங்கடத்திற்கு ஆளானார்கள்.
தாக்குதலை நடத்திய தீவிரவாதியின் இஸ்லாமிய அடையாளம் காரணமாக மக்களின் சந்தேகமும், கோபமும் தங்கள் மீது பாயலாம் எனும் எண்ணம் அவர்களை உள்ளுக்குள் உலுக்கியது.
இந்நிலையில், மக்களுக்குள் பிரிவினை ஏற்படுத்த நினைக்கும் தீவிரவாதத்திற்கு பதிலடியாக, ஆஸ்திரேலியர்கள் ஒற்றை டுவிட்டர் ஹாஷ்டேக் மூலம் மத வேறுபாட்டை வேரறுத்துள்ளனர்.
‘ஐவில்ரைட்வித்யூ’ (#illridewithyou ) எனும் அந்த ஹாஷ்டேக், ஆஸ்திரேலியாவில் அச்சம் மற்றும் பீதியின் பிடியில் சிக்கித் தவித்த முஸ்லீம்களுக்கு துணை நின்று மனிதத்தின் ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளது.
உலக அளவில் பிரபலமாகி உள்ள இந்த ஹாஷ்டேக்கால், பதற்றத்தின் பிடியில் உள்ள ஒரு தேசம் அதன் சிறுபான்மையினருக்காக ஒன்று திரண்டு நிற்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இதன் மூலம், உலக அளவில் ஆஸ்திரேலிய மக்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.