Home நாடு உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 2,300 மலேசிய பேராளர்கள் – சாமிவேலு!

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 2,300 மலேசிய பேராளர்கள் – சாமிவேலு!

593
0
SHARE
Ad

Samy-Velluகோலாலம்பூர், டிசம்பர் 19 – வரும் ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 1-ஆம் தேதிவரை நடைபெறவுள்ள 9-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு இதுவரை 150 மலேசிய பேராளர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.

மலேசியாவிலிருந்து மொத்தம் 2,300 பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசிய கட்டமைப்புத் துறையின் சிறப்புத் தூதரும் 9-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் தலைவருமான டத்தோஸ்ரீ உத்தாமா டாக்டர் ச.சாமிவேலு (படம்) தெரிவித்தார்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் பதிவு நாள் ஜனவரி 10-ஆம் தேதி முடிவடைந்தாலும் தமிழ் மீது அன்புள்ளவர்களும் பற்று உள்ளவர்களும் இம்மாநாட்டில் வந்து கலந்து கொள்ளலாம் என நேற்று தலைநகர் பிளாஸா சென்ட்ரலில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் நடை பெற்ற செய்தியாளர் சந்திப்புக்கூட்டத்தில் ச.சாமிவேலு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இம்மாநாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் நசாக் அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைக்க உள்ளார். இம்மாநாட்டில் சிறந்த பேச்சாளரான தமிழக முதலமைச்சர் பன்னீர் செல்வமும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவீன உலகமயக் காலக்கட்டத்தில் தமிழாய்வுக்கு வளம் சேர்த்தல் எனும் கருப்பொருளினைக் கொண்டு நடைபெறவுள்ள இம்மாநாடு, ஆசியா நாடுகளிலிருந்தும் அமெரிக்கா, ஐரோப்பிய கண்டங்களில் இருந்தும், ஏனைய பிரதேசங்களிலும் உள்ள தமிழர்களையும், தமிழ் மொழியையும் சார்ந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களை, கல்விமான்களையும் ஒன்றிணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ச.சாமிவேலு கூறினார்.

இம்மாநாடு சிறந்த முறையில் நடைபெற மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தமிழ்நாடு ரீதியில் விளக்கக் கூட்டங்கள் நடைபெற்றன. இதன் விளைவாக பொதுமக்களுக்கு இம்மாநாடு தொடர்பான தகவல்கள் நல்ல முறையில் சென்று சேர்ந்தன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தந்த நாடுகளில் உள்ள அதிகமான பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதாக உறுதியளித்துள்ளனர். இதன் மூலம் மலேசியாவில் சுமார் 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் அதிகமான பேராளர்கள் நிச்சயம் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

இதனிடையே, இம்மாநாட்டில் ஆய்வுச்சுருக்கங்களின் தலைப்புகளில் இதுவரை 936 பேராளர்கள் பதிவு செய்துகொண்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், மலேசியா, சிங்கப்பூர், தமிழ்நாடு, இலங்கை, ஏனைய இந்திய மாநிலங்கள், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, தென் கொரியா, மொரிஷியஸ், தென் ஆப்ரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருத்து தேர்ந்தெடுக்கப்பட்ட 600 ஆய்வுச் சுருக்கங்கள் கிடைத்துள்ளன என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ச.சாமிவேலு.