Home நாடு “ரவுடிகள் என்று கூறி கட்சிப் பிரச்சனையைத் திசை திருப்ப வேண்டாம்” – பழனிவேலுவுக்கு டி.மோகன் குழுவினரின்...

“ரவுடிகள் என்று கூறி கட்சிப் பிரச்சனையைத் திசை திருப்ப வேண்டாம்” – பழனிவேலுவுக்கு டி.மோகன் குழுவினரின் பதிலடி

596
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 22 – “மஇகா மத்திய செயலவைக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்தவர்கள் குண்டர்கள்” எனக்கூறி கட்சியில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சனையைத் திசை திருப்ப முயல வேண்டாம் என கட்சித் தலைவர் பழனிவேலுவுக்கு முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டி.மோகனும் அவரது குழுவினரும் கடுமையாகச் சாடி பதிலடி கொடுத்துள்ளனர்.

MIC HQ T.Mohan speaking - Dec 18
டிசம்பர் 18ஆம் தேதி மஇகா தலைமையகம் முன்பு கூடிய கூட்டத்தினரிடையே உரையாற்றும் டி.மோகன்

நேற்று முன்தினம் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட டத்தோ டி.மோகன். டத்தோ என்.முனியாண்டி, டத்தோஸ்ரீ சா.வேள்பாரி ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மஇகாவில் மறுதேர்தலுக்காகப் போராட்டம் நடத்திவரும் இவர்கள் “கடந்த டிசம்பர் 18ஆம் தேதி மஇகா தலைமையகத்தின் முன் கூடியவர்கள் அனைவரும் மஇகா கிளைகளின் உறுப்பினர்கள், அவர்களை குண்டர்கள் என தரக் குறைவாக பழனிவேல் பேசக் கூடாது” என்றும் கூறியுள்ளனர்.

#TamilSchoolmychoice

கூட்டம் கூடுபவர்கள் எல்லாம் குண்டர்கள் என்றால், பழனிவேல் நாடு திரும்பியபோது விமான நிலையத்தில் குழுமியவர்களும் குண்டர்கள்தானா என்ற கேள்வியையும் டி.மோகன் தலைமையிலான குழுவினர் எழுப்பியுள்ளனர்.

அன்றைய தினம் (டிசம்பர் 18) பழனிவேலுவுக்கு ஆதரவாக மஇகா தலைமையகத்தில் திரளுங்கள் என மற்றொரு மத்திய செயலவை உறுப்பினர் குமார் அம்மானும், மஇகா தலைமையகத்தின் தகவல் பிரிவுத் தலைவர் சிவசுப்பிரமணியமும் குறுஞ் செய்திகள் அனுப்பினர் என்றும் குறிப்பிட்ட டி.மோகன், அப்படியானால், அவர்கள் சொல்லி வந்தவர்களும் குண்டர்கள்தானா என்றும் சாடியுள்ளார்.

கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு தீர்வு காணவேண்டும், அதை விடுத்து, பிரச்சனையைத் திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபடுவதை இத்தோடு பழனிவேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் டி.மோகன் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் மற்றொரு பேட்டியில் மஇகா தேசியத் தலைவர் பழனிவேல், கடந்த டிசம்பர் 18ஆம் கூடிய கூட்டத்தில் வந்திருந்தவர்களில் எனது ஆதரவாளர்களும் அடங்குவர் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.