கோலாலம்பூர், டிசம்பர் 28 – 162 பயணிகளுடன் இந்தோனிசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் ஆசியா விமானம் காணவில்லை என்பதை ஏர் ஆசியா உறுதிப்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து அதன் இணையத் தளம் உடனடியாக வெளிர் கருமை (grey) நிறத்துக்கு மாற்றப்பட்டிருக்கின்றது. சோக சம்பவம் உறுதிப் படுத்தப்படாத நிலையில் – தேடுதல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் – நிலைமையை எடுத்துக் காட்டும் வண்ணம் ஏர் ஆசியாவின் இணையத் தளத்தின் நிறம் வெளிர் கருமைக்கு மாற்றப்பட்டிருக்கின்றது.
இதற்கிடையில் சிங்கப்பூர் கடற்படையும், அந்த நாட்டின் மீட்பு ஒருங்கிணைப்பு குழுவும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக ஆயத்த நிலையில் உள்ளன. இந்தோனிசியா அரசாங்க இலாகாக்களுக்குத் தேவையான உதவிகளைப் புரிய தயாராக இருப்பதாக சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது.
QZ8501 என்ற வழித்தட சேவை எண் கொண்ட ஏர் ஆசியா விமானம் இந்தோனிசியாவின் சுரபாயா நகரிலிருந்து புறப்பட்டு இன்று காலை உள்நாட்டு நேரப்படி காலை 8.30 மணிக்கு சிங்கப்பூர் வந்தடைய இருந்தது.
இந்நிலையில் காலை 7.54 மணியளவில் அந்த விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக ஜாகர்த்தாவின் விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு மையம் அறிவித்தது.
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் (டெர்மினல் 2) பயணிகளின் உறவினர்களுக்காக சிறப்பு சேவை மையம் ஒன்றும் உடனடியாக அமைக்கப்பட்டுள்ளது.