கோலாலம்பூர், டிசம்பர் 28 – ஏர் ஆசியா தொடங்கப்பட்ட தினத்திலிருந்து முதன் முறையாக கடுமையான – இக்கட்டான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இந்த கால கட்டத்தில் ஏர் ஆசியா நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மனம் தளர்ந்துவிடக் கூடாது என அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ் (படம்) கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் காணாமல் போனது உலகெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஏர் ஆசியா நிறுவனப் பணியாளர்கள் மத்தியில் கூடுதல் கவலையும் பதற்றமும் நிலவி வருகிறது.
இந்நிலையில் தனது ஊழியர்களின் மனநிலையைக் கருத்தில் கொண்டு தனது இணையத் தளப் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார் டோனி பெர்னாண்டஸ்.
“மிக விரைவில் விமானத்தின் நிலை குறித்த மேலும் ஓர் அறிக்கையை வெளியிட உள்ளோம். உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் எண்ணங்களுக்கும் நன்றி. நாம் மனம் தளர்ந்துவிடக் கூடாது,” என இன்று நண்பகல் 1 மணியளவில் தனது டுவிட்டர் பக்கத்தில் டோனி ஃபெர்னாண்டஸ் பதிவிட்டுள்ளார்.
“எனது வாழ்நாளின் மிக மோசமான நாள்”
“இன்று ஏர் ஆசியா காணாமல் போன நாள் எனது வாழ்நாளில் மிக மோசமான நாள்” என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் டோனி பெர்னாண்டஸ் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற விமான நிறுவனங்கள் காட்டியுள்ள ஆதரவுக்கும், அக்கறைக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ள டோனி, இருப்பினும் தங்களின் தொடர் முயற்சிகளை நிறுத்தப் போவதில்லை என்றும் உறுதியுடன் கூறியுள்ளார்.