கோலாலம்பூர், டிசம்பர் 28 – விமானப் போக்குவரத்துத் துறையிலும் விமானச் சேவையிலும் ஏர் ஆசியாவுக்கும் மாஸ் நிறுவனத்திற்கும்தான் இந்த வட்டாரத்தைப் பொறுத்தவரை நேரடியானப் போட்டி.
தற்போது ஓர் இக்கட்டான தருணத்தில் இருந்து வரும் ஏர் ஆசியா நிறுவனத்திற்கு மாஸ் நெகிழ்ச்சியூட்டும் வகையில் ஆறுதல் வார்த்தைகள் கூறி அறிக்கை விட்டிருக்கின்றது.
ஏர் ஆசியா ஊழியர்கள் மனம் தளர வேண்டாம் என அந்நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ் கேட்டுக் கொண்டுள்ள நிலையில், ஏர் ஆசியா நிறுவனத்துக்கு அதேபோன்றதொரு ஆறுதலை மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனமும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாஸ் நிறுவனத்தின் முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில், மிகச் சுருக்கமாக, அதேசமயம் தைரியமூட்டும் அந்தப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
“எங்களது எண்ணமும் பிரார்த்தனைகளும் ஏர் ஆசியா விமானத்தில் பயணம் செய்த அனைவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களையும் சுற்றியே உள்ளது” என மாஸ் நிர்வாகம் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் சோகத்தையும் வருத்தத்தையும் குறிக்கும் ஒரு குறியீட்டு படத்துடன், வெளிர் கருமை நிறத்தில் “மனம் தளர வேண்டாம் ஏர் ஆசியா” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
மாஸ் பேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்றுள்ள இப்பதிவை சுமார் 13 ஆயிரம் பேர் விரும்பி (லைக்) உள்ளனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை இப்பதிவு பகிரப்பட்டுள்ளது.
இக்கட்டான தருணத்தில் தனது போட்டியாளரான ஏர் ஆசியாவுக்கு ஆறுதலும் தைரியமும் தெரிவித்துள்ள மாஸ் நிறுவன நிர்வாகத்தைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி உள்ளனர்.