ஜாகர்த்தா, டிசம்பர் 29 – காணாமல் போன ஏர் ஆசியா விமானத்தின் விமானி கூடுதல் உயரத்தில் பறக்க அனுமதி கேட்டதாக இந்தோனேசிய விமானப் போக்குவரத்து துறை இயக்குநர் ஜோகோ முர்யோ அட்மோட்ஜோ தெரிவித்துள்ளார்.
ஜாகர்த்தாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தோனேசியாவின் போமியோ தீவுக்கும் தஞ்சோங் பாண்டாங் பகுதிக்கும் இடையே வானில் பறந்து கொண்டிருந்த போது ஏர் ஆசியா விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறினார்.
“தனது பயண தூரத்தில் கிட்டத்தட்ட பாதியை அந்த விமானம் கடந்து விட்டிருந்தது. காணாமல் போவதற்கு முன்னர் மேலும் அதிக உயரத்தில் பறக்க விமானி அனுமதி கோரினார்,” என்றார் ஜோகோ முர்யோ.
காணாமல் போவதற்கு முன்னர் ஏர் ஆசியா விமானம் சுமார் 32 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இந்த உயரத்தை 38 ஆயிரம் அடியாக உயர்த்த விமானி அனுமதி கோரியுள்ளார்.
மோசமான வானிலை நிலவியதன் காரணமாக அதிகளவு மேகக் கூட்டங்களைத் தவிர்க்கும் விதமாகவே, கூடுதல் உயரத்தில் பறக்க விமானி அனுமதி கோரியதாக ஜோகோ முர்யோ மெலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், நேற்று இந்தோனேசிய நகர் சுரபாயா சென்று சேர்ந்த ஏர் ஆசியா குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ், அங்கு ஜூவாண்டா விமான நிலையத்தில் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் சோக முகத்துடன் அமர்ந்திருந்த காட்சி.
படம்: EPA