சிங்கப்பூர், டிசம்பர் 30 – காணாமல் போன ஏர் ஏசியா விமானத்தை ஆழ்கடலில் தேடுவதற்கு ‘லொகேட்டர் பீகான் டிடெக்டர்’ (Locator Beacon Detectors) தொழில்நுட்பத்தை பயன்படுத்த சிங்கப்பூர் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
எனினும், அதனை இந்தோனேசியக் கடலில் பயன்படுத்த அந்நாட்டு அதிகாரிகளின் அனுமதி அவசியம். அதனைப் பெறுவதற்கு சிங்கபூர் அரசு, இந்தோனேசியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
ஜாவா கடல் அருகே 162 பேருடன் மாயமான ஏர் ஏசியா விமானம் QZ8501-ஐ தேடுவதற்கு மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றன.
எனினும், மோசமான வானிலை காரணமாக இதுவரை, விமானத் தேடலில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்பட வில்லை. இந்நிலையில் சிங்கப்பூர், ஆழ்கடலில் விமானத்தை தேடுவதற்கு நவீன கருவிகளை பயன்படுத்த உள்ளது.
இது தொடர்பாக சிங்கபூர் அமைச்சகத்தின் வான்வெளி விபத்து விசாரணை பிரிவின் சார்பில் கூறப்படுவதாவது:- “ஆழ்கடலில் விமானத்தை தேடுவதற்கு, இரு கருவிகளை பயன்படுத்த உள்ளோம்”.
“அவற்றில் ஒன்று ‘ஹைட்ரோபோன்’ (hydrophone). அதன் மூலம் விமானத்தின் சமிக்ஞைகளை பெற்று, விமானம் ஆழ்கடலில் எந்த இடத்தில் உள்ளது என்பதை கண்டறிய முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கருவிகள் மாயமான எம்எச் 370 விமானத்தின் தேடுதல் வேட்டையின் போது பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.