புதுடெல்லி, டிசம்பர் 30 – இந்துக் கடவுள்களையும், இந்து மத நம்பிக்கையையும் இழிவு படுத்தும் விதமானக் காட்சிகள் அமீர்கானின் ‘பிகே’ படத்தில் இருப்பதாகக் கூறி அந்த படம் ஓடும் தியேட்டர்கள் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் அமீர்கானின் ‘பிகே’ படத்திற்கு எதிர்ப்புக்கள் அதிகரித்து வருகிறது. அமீர்கான் மற்றும் அனுஷ்கா சர்மா நடித்து கடந்த 19-ஆம் தேதி வெளியான ’பிகே’ படம் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
படத்தில் உள்ள காட்சிகள் சில இந்து மதக் கடவுள்களையும், இந்துமத நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக பேசிய பஜ்ரங்தள் அமைப்பின் பிரதிநிதி தர்மேந்திரா அசோலியா கூறுகையில், “அமீர்கானுக்கும், அனுஷ்கா ஷர்மாவுக்கும் இடையிலான உரையாடல் மற்றும் பாடல் காட்சிகள் ‘காதல் ஜிகாத்’ அமைப்பை முன் நிறுத்துவதாக உள்ளன” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள திரையரங்குகளில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ’பிகே’ படம் ஓடும் திரையரங்குகள் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
ஆனால் படம் இந்தியா அளவில் நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றதோடு, வசூல் அளவிலும் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.