சென்னை, டிசம்பர் 31 – அண்மையில் மறைந்த தனது குருவும், திரைப்பட இயக்குநருமான கே. பாலசந்தரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளமுடியாமல் அமெரிக்காவில் இருந்த நடிகர் கமலஹாசன் இன்று நாடு திரும்பியவுடன், பாலசந்தரின் வீட்டிற்கு சென்று, அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “கே. பாலசந்தர் இளைஞர்களின் வழிகாட்டி. சினிமாவுக்கு தன் திறமையை கொடையாக வழங்கியுள்ளார். அவரது மறைவு சினிமா உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. 70க்கும் மேற்பட்ட அவரது படங்கள் மக்களால் எப்போதும் பேசப்படும். அவர் ஒரு சிருஷ்டிகர்த்தா. அவர் விட்டுச்சென்ற பணிகளை ஒரு மகனின் கடமையாக ஏற்று நான் தொடர்வேன்” என்று கூறினார்.
தனது முதல் படத்திற்கு எப்படி வந்தேனோ, அதே போன்றுதான் இப்போதும் வந்துள்ளேன் என்று குறிப்பிட்ட கமல், தனது தந்தையுடன் இருந்த நேரங்களைக் காட்டிலும் அதிக நேரம் பாலசந்தருடன் இருந்திருப்பதையும் நினைவு கூர்ந்தார்.