தானா மேரா (கிளந்தான்), டிசம்பர் 31 – மலேசியக் காவல் துறையின் ஹெலிகாப்டர் ஒன்று கிளந்தானில் தானா மேராவில் கம்போங் ரம்பாய் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியதில், நான்கு பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்ப்பலி ஏதும் நேரவில்லை.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிப்பதற்காக உணவுகளை ஏற்றிக் கொண்டு அந்த ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்தது.
சம்பவத்தை உறுதிப்படுத்திய காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார், ஹெலிகாப்டரைச் செலுத்திய இரண்டு விமானிகளும், மற்றும் உடன் சென்ற இருவரும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். அவர்களின் மூவர் காவல் துறையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் சமூக சேவையாளராவார்.
சிகிச்சைக்காக அந்த நால்வரும் தானா மேரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.