ஜாகர்த்தா, ஜனவரி 5 – ஜாவா கடற்பகுதியில் பறந்தபோது விபத்துக்குள்ளான ஏர் ஆசியா விமானம் கடலில் பத்திரமாக தரை இறங்கியிருக்க வேண்டும் என விமானத்துறை வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அங்காசா என்ற விமானத்துறை தொடர்பான பத்திரிகையின் மூத்த ஆசிரியரான சுடிப்யோ, குறிப்பிட்ட அந்த விமானத்தை அவசர காலத்தில் கடலில் தரையிறக்கும் வழிமுறையைப் பின்பற்றி விமானி வெற்றிகரமாக கடலில் தரை இறக்கியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
“ஏர் ஆசியா விமானத்தை அதன் கேப்டன் இரியாண்டோ சாமர்த்தியமாக தரை இறக்கியிருக்க வேண்டும். எனினும் அதன் பிறகு பெரிய கடல் அலைகளால் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம்.
விமானம் வழக்கத்துக்கு மாறாக நிலத்திலோ, கடலிலோ அல்லது மலைப்பகுதிகளிலோ விழுந்து விபத்துக்குள்ளானால் அவசர காலத்தில் இருப்பிடத்தைத் தெரிவிக்கும் டிரான்ஸ்மிட்டர் செயல்படத் தொடங்கியிருக்கும்.
ஆனால் அதுபோல் எதுவும் நடக்காததால், விமானம் தரை இறங்கும்போது எந்தப் பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை என எனது ஆய்வில் தெரிய வந்துள்ளது,” என்கிறார் சுடிப்யோ.
மோசமான வானிலை நிலவும்போது விமானியால் அனைத்துப் பயணிகளையும் காப்பாற்றுவது இயலாத செயல் என விமானத்துறை நிபுணர்கள் பலரும் கூறியுள்ளனர்.
இந்நிலையில், கருப்புப் பெட்டி கிடைத்தால் மட்டுமே அதில் உள்ள முக்கியத் தரவுகளை வைத்து விமானம் கடலில் விழுந்ததற்கான காரணம் தெரிய வரும்.