புதுடெல்லி, ஜனவரி 5 – சமூக வலைதளங்கள் மூலம் மத்திய அரசு மேற்கொண்டுவரும் மேக் இன் இந்தியா பிரச்சாரத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தையும், தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளையும் பெருக்கும் வகையில் ‘மேக் இன் இந்தியா‘ (இந்தியாவில் உற்பத்தி செய்வோம்) பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதோடு, இந்தியாவை முதலில் முன்னேற்ற வேண்டும் என்பது மத்திய அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. இந்தியாவில் உற்பத்தி பெருகுவதன் மூலம் தொழில்துறை வளர்ச்சி அடைவதோடு, வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.
எனவே, இதற்கு தேவையான உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் ‘மேக் இன் இந்தியா’வை பிரபலப்படுத்தும் வகையில் வகையில் சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர் மூலமும் மத்திய அரசு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
இதன்படி ‘மேக் இன் இந்தியா’வின் பேஸ்புக், டுவிட்டர் பக்கத்தில் 3 நொடிக்கு ஒருவர் சேர்வதாகவும், 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதன் பேஸ் புக் பக்கத்தை விரும்பியதாகவும், உலக அளவில் இந்த முயற்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.