ஜாகர்த்தா, ஜனவரி 5 – கடலில் விழுந்த ஏர் ஆசியா விமானம் தனது சக்திக்கும் அப்பாற்பட்டு கூடுதல் உயரத்தில் பறக்க முயற்சித்ததால் விபத்தைச் சந்தித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
விபத்துக்குள்ளாகும் முன்பு அந்த விமானம் செங்குத்தாக கூடுதல் உயரத்திற்கு சென்றுள்ளது என ரேடார் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
162 பேருடன் சிங்கப்பூர் நோக்கிச் சென்ற அந்த விமானம் விபத்தைச் சந்திக்கும் முன்னர் சுமார் 32 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக 38 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க தரைக் கட்டுப்பாட்டு மையத்திடம் அனுமதி கேட்டுள்ளார் விமானி.
ஆனால் 38 ஆயிரம் அடி உயரம் வரை செல்ல அனுமதி அளிக்காத தரைக் கட்டுப்பாட்டு மையம், விமானத்தை இடப்புறமாக 7 மைல் தூரம் எடுத்துச் சென்று 34 ஆயிரம் அடி உயரத்திற்கு செல்ல அனுமதி அளித்துள்ளது.
ஆனால் இது தொடர்பான உரையாடலுக்குப் பிறகு விமானத்தில் இருந்து எந்தவித தகவலும் இல்லை. விபத்துக்குள்ளான விமானம் ஏர்பஸ் 320 வகையைச் சேர்ந்தது.
அந்த விமானம் தனது சக்தியை தாண்டி செங்குத்தாக பறந்திருக்கக்கூடும் என நிபுணர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். “மோசமான வானிலையை தவிர்க்க விமானம் திடீர் என்று செங்குத்தாக பறந்ததால் வேகமாக செல்ல முடியாமல் இருந்துள்ளது.
வேகம் குறைந்ததால் விமானம் தடுமாறி கடலில் விழுந்திருக்கும்,” என்று நிபுணர்கள் கருதுவதாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.