ஜாகர்த்தா, ஜனவரி 5 – ஜாவா கடற்பகுதியில் இருந்து இதுவரை 34 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மோசமான வானிலை காரணமாக தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
ஆழ்கடல் நீச்சலில் நிபுணத்துவம் பெற்ற நீச்சல் வீரர்கள் அடங்கிய பல குழுக்களின் முயற்சியால் விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து இதுவரை எந்தவிதமான ஒலிக்குறிப்புகளும் (PING) கிடைக்காததால், நீச்சல் வீரர்கள் சோர்வடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட அக்கடற்பகுதியில் வானிலை தொடர்ந்து மோசமாக இருப்பதாக இந்தோனேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. “மோசமான வானிலை காரணமாக விமானத்தை தேடும் முயற்சியில் நீச்சல் வீரர்களால் முழு வீச்சில் ஈடுபட முடியவில்லை”.
“அதிகமான விமானப் பாகங்கள் இருக்கும் என நாங்கள் சந்தேகிக்கும் இடத்தில் தேடுவதற்கே முன்னுரிமை அளிக்கிறோம்,” என இந்தோனேசியாவின் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவின் தலைவரான பம்பாங் சொலிஸ்ட்யோ தெரிவித்துள்ளார்.
போர்னியோ தீவிலிருந்து சுமார் 90 கடல்மைல் தொலைவில், அழ்கடலில் 5 பெரிய பொருட்கள் இருப்பது நவீன ஸ்கேனர் கருவிகள் வழி தெரியவந்துள்ளது.
அவை ஏர் ஆசியா விமானத்தின் பாகங்களாக இருக்குமென சந்தேகிக்கப்படுகிறது. அவற்றுள் ஒரு பொருள் மட்டும் சுமார் 59 அடி நீளம் உள்ளது.
“கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்க்கும்பபோது விமானத்தின் சிதிலமடைந்த பாகங்கள் உள்ள பகுதிக்கு மிக அருகிலேயேதான் அதன் கருப்புப் பெட்டியும் இருக்க வேண்டுமெனக் கருதுகிறோம்.
எனினும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள எந்தக் கப்பலும் இதுவரை கருப்புப் பெட்டியிலிருந்து வரக்கூடிய ஒலிக்குறிப்பைப் பெறவில்லை, “என்றார் சொலிஸ்ட்யோ.